நான் தனியே!
Author: நதியானவள், August 8, 2009கவிந்து கிடக்கிறது இருள்;
வானம் மனம் விட்டு – கணத்தில்
விட்டு விட்டு அழுத மாலையில்
மழையில் நனைந்து தனியே நடக்கின்றேன் நான்.
விரிந்து கிடக்கிறது சாலை;
என் பாத ஒலியே தேய்ந்து – எனக்கு
எட்டு எட்டாய் துணை வரும் பொழுதில்
பயந்து நடக்கின்றேன் நான்.
கலைந்து களைத்துக் கிடக்கும் உயிரும் – கூட
அலைந்து சோர்ந்து நிற்கும் மனமும் – சோகம்
நினைந்து உறங்கிப் போக – மழை
நனைந்த சாலை தனியே நடக்கின்றேன் நான்.
இலக்கற்ற வாழ்க்கை கைக் கொண்டு
பளுவற்ற பூமிக்கும் சிரமம் என்று
கழுவேற்றத் துடிக்கும் வெறுமையுடன் – மழை
கழுவிப் போன சாலை நடகின்றேன் நான்.
கனவுகள் நீளும் விழிகள் கலங்க
எனதென்ற உறவு இல்லா வெளியில்
நனவுகள் தேடி தினமும் – வான
மழை கழுவிய சாலை நடக்கின்றேன் நான்.
விடிகின்ற ஒவொரு தினமும் – என்
மனம் சாயும் உறவைத் தேடி
கனக்கின்ற உயிர் சுமந்து – நீளும்
சாலை தனியே நடக்கின்றேன் நான்;
கனவுகள் கைகூடும் போது – உன்
தோள் சாய்ந்து கை கோர்த்து – என்
நாள் போகும் என்ற நம்பிக்கையில் – இப்போது
சாலை நடக்கின்றேன் உன் நினைவு துணை கொண்டு.;
நான் என்னைச் செய்வேன்!
Author: நதியானவள், August 2, 2009இப்போதும் நினைவிருக்கிறது;
நீ என் தோழியான காலம்!
இலைகள் உதிரக் கண்டு – என்
இதயம் அழுது கொண்டிருந்த போதொன்றில்
புன்னகைத்து இணைத்துக் கொண்டாய்;
என்னுடன் உன்னை;
சட சடவென்று துளிர்க்க ஆரம்பித்தது
எம் நட்பு மரம்!
என் கை பிடித்து; உரிமை எடுத்து;
தலை சாய்த்து நீ பார்க்கையிலே
தோன்றிப் போகிறது எனக்கு;
உனக்காய் நான் என்ன செய்தேன்;
இல்லை; என்ன செய்வேன்;
கலங்கி நிற்கும் என் கண்மணியே;
உனக்காய் நான் என்ன செய்வேன்?
வலிகள் தம் வாழ்த்துரையை – உன்
வாழ்க்கையில் வாசித்துப் போனதென்கிறாயா?
வருந்தாதே!
பற்றிய என் கையை மேலும்
இறுகப் பற்றிக் கொள்;
எனக்கான மூச்சு நிறுத்தப் படினும்
என் கை உன்னைக் கை விடாது!
உதிரும் கண்ணீர்த் துளிகள்
உருக்குகின்றனவா உன்னை;
நிறுத்து!
தேவதைகள் கண் கலங்கி
கண்டதுண்டா நீ!
பெண்களாய்ப் பிறந்ததனால்
நாம் தேவதையானவர்கள்!
உன் கன்னந் தடவும் பிறர் கைகளில்
உன் காயங்களின் கறைகளா;
உதிராதே!
கறைகள் கழுவிப் போகும்
கங்கை நதி வேண்டுமா?
அந்த நதியின் குறை கழுவி
அள்ளி வருவேன் உனக்காக!
கணகள் வழியும் கனவுகளை
ஏந்த யாருமில்லை என்றேங்குகிறாயா
கலையாதே!
நீ கடக்கும் சாலைகளில்
நிறுத்தி வைக்கிறேன் நான் என்னை;
கனவுகளுடன் நினைவுகளையும் ஊற்று;
பொத்திச் சேமிப்பேன் உனக்காக!
மெலிந்து ஒலிகிறதா உன் மூச்சு;
வலிந்து போகிறதா உன் உயிர்;
தெளிந்து வா என் தோழியே!
தோழமைக்காக நான் என்ன செய்தேன்;
என்ன செய்வேன்; என்பது ஒரு பொருட்டல்ல;
நான் என்னைச் செய்வேன்!
உனக்காக!
உயிர் கொல்லும் உன் நினைவுகள்.!
Author: நதியானவள், July 24, 2009பனி விழும் இரவு நீள – தினம்
நனி செய்யும் பொழுது கூட – உன்
கனிவுறும் பார்வைகளாலே – நான்
வனிதையாக மாறிப்போனேன்.
நானிலம் அதிர்ந்து போக – நான்
வானிலும் தேடிப் பார்த்தேன்
உன்னிலும் சிறந்ததொன்றை – என்
கனவிலும் கண்டறியேன்…
பொன்னுச்சி உதிர்க்கும் பூவாய் – உதிர்ந்து
விண்ணுச்சிக் கூவுகின்றேன்; – உன்
காதலில் வாழ்வதற்கு நான்
சாதலுக்கும் சம்மதிப்பேன்….
யன்னல் – வழிந்தோடும் மழை போய் – மீந்து
நெளிந்தோடும் துளியாய் – நினைவும்
நலிந்தோடும் நதியாய் ஆக – நானும்
சுளிந்தோடும் கடலுள் விழுந்தேன்…..
உயிர் அலறக் கேட்டுக் – காதைக்
கயிறு கொண்டு கட்டிப் போட்டால் – உன்
வார்த்தைகள் காற்றில் வந்து – எனை
மூர்ச்சைக்குள் அமிழ்த்தி விடுது….
வாழ்க்கையில் கொண்ட காதல் – அண்ட
நீள் வெளி அடர்ந்த சாதல் – நீண்ட
குகை வழிக் கொண்ட கூதல் – தீண்ட உயிரோ
வகை அழிந்து மாண்டும் போச்சு..
கண் மடல் கனவில் அமிழ – என்
பிண உடல் மண்ணில் தவழ – உன்
மன கடல் பண்ணில் அவிழ – நான்
நன திடல் கட்டிப் போனேன்.
காதல் பொய்த்துப் போக – நான்
சாதல் தான் என்றுமாக – உயிர்
நீக்கும் நேரத்திலும் – உன் நினைவு
காக்கும் கடவுளாச்சு…
கடல் தாண்டி அலை தாண்டி – வான்
திடல் தாண்டி நிலை நிலா தாண்டி – இறை
விடல் தாண்டி வலை தாண்டி – பறந்தும் இமை
மடல் தாண்ட மறுக்குது உன் காதல்….
காதல் என்ற ஒன்றால் – தினம்
சாதல் வரமும் பெற்றேன்; – கூட
நினைவுகள் அழியா வண்ணம்
காக்கும் வரமும் கொண்டேன்..
அழிந்து போகாக் கடல் நிகர்த்த
வழிந்தோடும் உன் ஞாபகங்கள் – இதயம்
பிளிந்தோடும் குருதி போல – என்னுள்ளே
நெளிந்தோடும் நியதியாச்சு;
நான் என்னதான் செய்ய வேண்டும்
உன் வண்ண முகம் மறக்க வேண்டும் – ஆக
மண் தின்ன என் உடலைக் கொஞ்சம்
பண் எண்ணிப் புதைக்க வேண்டும்.
எதற்கும் எதிர்க்கும் – எனது
பிதற்றும் மனது – ஆனால்
கற்றும் கல்லாமலும் – உனையே
நித்தம் நினைத்துப் பூக்கும்.
முடிக்கும் வழி மறந்தேன் – உன் நினைவை
வடிக்கும் வழி சிறந்தேன் – ஆக
நெடிக்கும் உயிரின் காயம் தன்னை
குடிக்கும் கயிறும் கொண்டேன்.
ஆக;என் ..
வண்ணம் மறைந்து போக – மன
எண்ணம் வற்றிப் போக – கண்
திண்மம் என்றுமாக – நான்
விண்ணும் எய்தி விட்டேன்.
நீள்ந்த என் ஆயுள் தாண்டி
வீழ்ந்த உன் நினைவு வேண்டிப்
பாழ்ந்த கிணறு நாடி – நான்
மூழ்ந்து என் ஆவி துறந்தேன்.
கொல்லும் உன் நினைவு கொண்டு
வெல்லும் வலிகள் தோண்டி – மேலே
வழியும் குருதி குளைய – என் பிணம்
நெளியும் புழுக்கள் துடைக்கின்றேன்.
என் மேல் விழும் ரோஜா சேர்த்து – உன்
தோள் விழும் மாலை கோர்த்து – என் உயிர்
விண் தொடும் வேளை பார்த்து – இந்த
மண் பார்க்க எறிந்து போவேன்! – கூட
நான் எரிந்து போவேன்.!
எரியா உன் நினைவும் சேர்த்து!
காதல்
Author: நதியானவள், July 16, 2009நீயும் நானும் – எதிலும்
உடன்பாட்டுக்கு வராததால்
வேலை நிறுத்தத்தில் – இருக்கிறது
என் இதயம்.
கலைந்த என் தேசம்.!
Author: நதியானவள், July 12, 2009கலைந்து போய்க்கிடக்கிறது என் தேசம்;
நிலா தந்து போன வானம் – தினம்
பிணம் பெய்து போகக்
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.;
நிறைந்த வெளிகள் தோண்டி – என்
உறவுமறைந்த குழிகள் மூடிப் – பல
திறந்த முகாம்கள் வந்த பின்பு
கலைந்துபோய்க் கிடக்கிறது என் தேசம்..;
நீதி தவறிய அரசும் – உலக
சூது பிதற்றிய வங்கமும் – கலக
வாது ஏற்றிய சங்கங்களும் – எமக்கு
முக அரிதாரம் அப்பிப் போனதனால்
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.;
சிதறிய அங்கமும் உடலும் – மணக்கும்
குதறிய காயமும் வடுவும் – நெடுக்கும்
கதறிய தாயும் சேயும் உறவும் -மேலும்
இதயம் பிளக்கும் நினைவும்
சேர கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்!
கல்லறை நீளும் வயல் வெளிகள் – நெல்
புதைந்து எலும்பு செழிக்கும் குழிகள் – செல்
பொழிந்து தளும்பிக் கொடுக்கும் நர பலிகள் -கல் உம்
கனிந்து உருகும் கண்ணீர்க் கதைகள் – எல்லாம் கண்டு
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.!
விளைந்து காலெடுக்கும் வெடிகள் – பல
பறந்து வால்வெடுக்கும் குண்டுகள் – சில
கழிந்து கற்ப்பெடுக்கும் அரக்கர்கள் – நில
அளந்து சூறையாடும் குண்டர்கள் – என்று
நின்று நீளும் பட்டியல் தாளாது
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.!
சூழ்ந்த கடல் என் கடல் – அதைச்
சூழ்ந்த நிலம் என் நிலம் – இதைச்
சேர்ந்த புலம் என் குலம் – நினைச்
சார்ந்த ஈழம் தமிழ் ஈழம் – என
விண்ணைக் கவர்ந்த குரல்வளை நெரிக்கப்பட
மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்.!
ஆக;மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்;
மரித்த தாய் மார்புறிஞ்சி – தன்னுயிர்
தரித்த சேய் கண்டபின்பு
மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்!
வாழ்வும்…. வரமும்…!
Author: நதியானவள், July 2, 2009வாழ வந்திருக்கிறேன் நான்..
என்னுடன் வாழும் வரம் வாங்கி – எங்கோ
வாழ்ந்து கொண்டிருக்கிறாய் நீ…
காத்திருப்பு
Author: நதியானவள், June 25, 2009நான் எழுதி குறையாக விட்ட
கவிதைகள் காத்திருக்கின்றன,
நீ வந்து நிரம்புவாய் என்று..
இடைவெளிகளிலும்…..;
எழுத்துப் பிழைகளிலும்…;
நிழலாக…
Author: நதியானவள், June 15, 2009நிழல் தேடுகையில்
நினைவுக்கு வருகிறாய் நீ…..
நீயே நிழலாக வருவதால்
சூடு மறக்கின்றன என் கால்கள்!
என் கண்கள்
Author: நதியானவள், June 13, 2009கடைசி வரமும்
கடைசி சாபமும் சேர்ந்து
என் கண்களாகின…..!
என் பூமியில் ஏதேதோ
Author: நதியானவள், December 31, 2008ஆழி சூழ் என் பூமி
ஆதாரமிழந்து ஆடுகிறது
அதன் விசையில்!
என் வானத்து விண்மீன்கள்
துள்ளிக் குதிக்கின்றன;
நீ ஏதாவது தூதனுப்பினாயா?
என் வரையின் எல்லைக் கோடுகள்
வான்மதியால் நீளமாக்கப் படுகின்றன;
உன் முணுமுணுப்புக்கள் அதன் காதில்
விழுந்துவிட்டதோ?
நீல வண்ண வானமதின்
நீங்கா வெப்பமும் ஒளியும்
நீ பார்த்த பார்வையில்
நீராகிவிட்டது போலும்!
என் பூமி பகலில் இருட்டி விடுகிறது!
என் தோட்டப் பூக்கள் எல்லாம்
உன் பெயர் சொன்னவுடன் பூக்கின்றன!
ஏன் உன் தோட்ட வண்டுகளையா
உத்தரவிட்டு அனுப்புகிறாய்?
என் புல்வெளியில் பனித்துளிகள்
எல்லை அற்று நீள்கின்றன
ஏன் என்கிறாயா?
பகலில் தான் சூரியன் பஸ்பமாகி விடுகிறதே!
அதனால் தான் சொல்லுகிறேன்;
உன்னால் பறிபோயாகிவிட்டது
என் பூமியின் உத்தமிப் பட்டம்;
என் பூமியில் ஏதேதோ
உன்னைச் சார்ந்து!

