எப்படி விளக்குவேன்!

Author: நதியானவள், August 23, 2009
August 23, 2009

அறியாமைக்குள் புதைந்து கிடக்கும் உனக்கு
எப்படி விளக்குவேன் நான்;
என் காதலை!

 

என் காதல் நானுரைத்து
உன் காதலின் கை பிடித்த போது
வானங் கனிந்து துளி சேர்த்து
வாழ்த்துக்கள் அனுப்பியதைச் சொல்லியா?

 

நிலா தன் ஒளி கூட்டி
விண்மீன்கள் சேர்த்துக் கட்டி
உன் மன விலாசமிட்டு
என் மன வாசல் சேர்த்ததை வாசித்தா?

 

மழையில்லா ஒரு பொழுதில்
மேகங்களிடை வானவில் தோன்றி
வர்ணங்களில் கிரீடம் செய்து
என் காதலுக்குப் போட்டதைக் காட்டியா?

 

பூக்கள் மலரும் கணம் பார்த்து
வாசங்கள் பொத்திச் சேர்த்து
தென்றலே நேரில் தந்த – என்
காதல் வாசம் முகரத் தந்தா?

 

பறக்கும் புல்லினங்கலேல்லாம்
பத்து நிமிடம் இடை நிறுத்தி
பூத்துப் போன நம் காதலுக்கு
இசைத்துப் போன பாடலைப் பாடியா?

 

அட விடு!
கண்கள் கதைத்துப் போக – மிகுதியில்
மௌனம் உரைத்துப் போக – விகுதியில்
நம்மிரு உயிர்கள் உயிர்த்துப் போக
காதல் செய்தும் புரியாது;

 

அறியாமைக்குள் புதைந்து கிடக்குமுனக்கு
எப்படி விளக்குவேன் நான்;
என் காதலை!

காதலை வணங்க வேண்டும்!

Author: நதியானவள், August 23, 2009
August 23, 2009

அறியாத வயதில் வரும்;
புரியாத கனவு தரும்;
கனவு வேர்கள் தேடுகையில்
விழுதுகள் தூக்குச் செய்யும்!

 

உயிருக்கே உயிரும் வரும்;
உதிர்கையில் மரணம் வரும்;
இல்லையென்று போனாலும்
இருப்பதுவாய் தோன்றிப் போகும்!

 

நிழல்கள் நிஜங்களாகும்;
நிஜங்கள் நிழல்களாகும்;
இரண்டையும் பிரித்தறியும் போது – மனம்
இறையைச் சென்றடைந்திருக்கும்!

 

கண் மடல்கள் கருக் கொள்ளும்;
கண்ணீரைப் பிரசவிக்கும்;
உயிரதுவோ கருக் கொண்டு
காதலினைப் பெத்துப் போடும்!

 

வலிகள் வரங்களாகும்;
வலிக்கையிலும் காதல் நினைவு வரும்;
சாவென்று வந்தாலும் – அதைச்
சற்று நேரம் நிறுத்தி வைக்கும்!

 

இரவிரவாய்க் கனவு வரும்;
பின்னிரவில் தூக்கம் வரும்;
விடிந்தெலுந்து பார்க்கையிலே
நரிகள் கூடி ஊளையிடும்!

 

உண்மைகள் தோற்றுப் போகும்;
பொய்மைகள் தோன்றிப் பாடும்;
விளக்கங்கள் தெரிகையிலே – உசிரு
விண்ணேறிப் போயிருக்கும்!

 

கணையாழி கொண்டு கட்டி
பிணையாளி ஆக்கிப் போகும்;
ஆணைகள் அழியும் போது
காதலின் யாகத்தீயில் உயிரெரியும்!

 

காணிக்கைகள் தயாராய் இருக்கும்;
காதலுக்காய்த் தவமிருக்கும்;
காலங்கள் கரைகையிலே – தெய்வக்
கர்ப்பக் கிருகம் தொலைந்திருக்கும்!

 

உயிர் கருக் கொண்டு தரும் காதல்
இறைஎன்றாகிப் போவதனால்
காதலிக்க நினைத்தால் முதலில்
காதலை வணங்க வேண்டும்!

உதயத்தின் பின் யோசிக்கலாம்!

Author: நதியானவள், August 22, 2009
August 22, 2009

ஒரு சர்வம் ஒடுங்கிப் போனதனால்
பல ஆன்மாக்கள் அழுகின்றன!

 

நீண்டு நிமிர்ந்து நிற்கும்
மயான சுவர்கள்;
யோகிகள்!

 

ஓங்கி எதிரொலிக்கும் மரண ஓலம்;
உயிருலுக்கும் ஒப்பாரி;
இறங்கும் தாலிகள் – இருந்தும்
இறக்காத மனச் சுமைகள்;

 

மெய்யான சில முகங்கள்;
பொய்யான பல முகங்கள்;
உறவுகளை உணர முன்னர் – உயிர்
உதிர்ந்து போன கதைகள் – என
யாவற்றுக்கும் சாட்சியாகி

 

நீண்டு நிமிர்ந்து நிற்கும்
மயான சுவர்கள்;
யோகிகள்!

 

எதுவுமே மிச்சமில்லை;
இழப்பதற்கு ஒன்றுமில்லை;
ஒன்றுமில்லாமல் போவதற்கா – இங்கு
இத்தனை போராட்டம்!

 

தீ படரச் சாம்பலாகி – நீரில்
கரைந்து போகும் பிண்டம்!
உயிர் கொண்டு வாழும்போது
உலுக்குவதோ இந்த அண்டம்!

 

ஆறடி பொய்;
அஸ்தியே மிஞ்சிப் போகும்;
சாவின் சக்தி அறியின்
வாழ்தலில் பக்தி தெரியும்!

 

கவலைகள் கண்ணீர் கரைக்கா;
கற்களை தண்ணீர் கரைக்கா; – ஆனால்
வந்தார் போக வேண்டும்;
அதைக் காலம்தான் கரைக்க வேண்டும்!

 

இழப்புக்கள் இவ்வளவுதான் – என்று
இங்கொன்றும் அளவுகளில்லை
இழவுகள் விழும் மட்டும் – மனது
இறையைத் தேடுவதில்லை;

 

ஆக;
வாழ்கின்ற வாழ்க்கையிதில்
நேற்றயதைக் கழிக்க வேண்டும்!
இன்ற்றயதை வாழ வேண்டும்!
அப்போ நாளையை;
உதயத்தின் பின் யோசிக்கலாம்!

சோக அழகு!

Author: நதியானவள், August 22, 2009
August 22, 2009

மலர் வளைய ரோஜா கொண்ட
சோக அழகு போல் இருக்கிறது;
என் இதயம் கொண்ட
உன் நினைவு!

தனிமை தேடி!

Author: நதியானவள், August 20, 2009
August 20, 2009

வலிகளும் கவி கூறும்
வழிகளும் வந்த பின்பு
உக்கி உதிர்ந்து போகின்றன
என் உணர்வுகள்!

 

ஏகாந்தம் படர்ந்து – எனை
ஏப்பம் விடத் துணிந்த பின்பு
ஏங்கத் தொடங்கியிருக்கிறது மனது;
எதுவுமில்லாத் தனிமைக்காக!

 

கலங்கிய குளம் காட்டும்
குழம்பிய விம்பங்கள் போல
விளங்காமல் இருக்கின்றன
விசித்திரமான பல உறவுகள்!

 

கனவுகளில் கண் மயங்கி – அது
கலைகையில் உயிர் உருகி
நனவுகளில் மனமளுகித் தினம்
நடந்து போகின்றேன் என் மீது நானே!

 

கண்ணீர் உப்புச் சுரந்து
கன்னத்தில் கோலமிட்ட போதும்
துடைக்கவும் நாதியற்றேன்;
தூக்கில் தொங்கிப் போன என் உணர்ச்சிகளால்!

 

என் கை நானே கோர்த்து
எதிர் நீச்சலிட்டுத் தாங்கி
நானாக நடக்கையிலே – என்
தனிமையை ஏன் வதைக்கிறீர்கள்?

 

வலிக்கிறது என்றாலும்
வலி தரும் உலகமிது
அழுகின்றேன் எனக்குள்ளே;
என்னுயிரே ஊமையாக!

 

ஆக;
மனமேங்கும் தனிமை தேடி
சூழ்ந்த இருள் தனைக் கொளுத்திப்
பயணிக்க வேண்டும் நான்!
வலி எழுதும் கவிதைகள் – என்
வாசல் வந்து சேரும் முன்னர்
மனமேங்கும் தனிமை தேடி
பயணிக்க வேண்டும் நான்!

யாருக்கு வேண்டும்!

Author: நதியானவள், August 17, 2009
August 17, 2009

விழி கனக்கும் என்
கனவுகள் இறக்கி ஒரு கணம்
நிம்மதியாகத் தூங்க வேண்டும்;
ஆம்; யாருக்கு வேண்டும் என் கவிதைகள் ?

ஊடல்!

Author: நதியானவள், August 17, 2009
August 17, 2009

நிலா பொழிந்த ஒரு இரவில்
நின்று கொண்டிருந்தோம்;
நீயும் நானும்!
ஒரு இரவு; இரு நிலவு;
என்றாய் நீ
அன்றிலிருந்து என்னுடன்
ஊடலில் இருக்கிறது நிலா!

உடனே வா

Author: நதியானவள், August 16, 2009
August 16, 2009

வழியும் கண்ணீர் உப்புச் சுவைத்து
காதல் வலிகள் வலிக்க வலிக்க
அழுது போகின்றேன் நான்;
தொலைந்து போன என் உயிரைத் தேடி!

 

கடலலை அழித்துப் போகும்
பாதச் சுவடுகளா காதல்?
உயிரழிக்கும் நினைவழிக்க
எந்தக் கடல் அலை தருது?

 

உருகி உருகிக் காதலெனும்
உன்னதக் கவி படித்தும்
கணங்கள் கடந்து போக
மனங்கள் மறக்கிறதே; யார் பொறுப்பு?

 

கனவுகள் பொழிந்து போகும் காதல்
வலிகள் வரையும் போது
நனவுகள் எரிக்கிறதே;
எந்த மழை அதை அணைக்கிறது?

 

சுடு மணல் நடக்கும் போது
குளிர் தந்த உன் நினைவு
பனி மழை கொட்டும் போதும் – உயிர்
உருக்குகிறதே; யாரைக் கேட்டு?

 

தோஷம் கழிக்கவென
ஆலயங்கள் ஆயிரங்கள்;
காதல் தோஷம் கழிக்க இங்கு
எங்கேனும் கோவிலுண்டா நீ சொல்லு?

 

கை தொட்டுக் கலக்கி விட்டுக் – கண்ணீர்க்
குளத்தைஎல்லாம் குழப்பி விட்டு – இப்போ
தளும்பி நிற்கிறதே மனசு – அதை
தடுக்க உன் கை எங்கே?

 

வாழ்க்கையிலே என் நிஜங்களேல்லாம் – உன்
வாசல் வந்து போகையிலே
நிழல்கள் மட்டும் தேர்ந்தெடுத்து – எனக்கு
அனுப்பினாயே; அது யார் கணக்கு?

 

நிலா விழுங்கும் கிரகணமாய் – நின்
நினைவு எனை தின்கையிலே
உடைந்து அழும் என்னுயிர் விட்டு விட்டு
எத்தேசம் நீ போய்ச் சேர்ந்தாய்?

 

நான் செய்த கல்லறையில்
நானாகக் கிடந்தது கொண்டு – இறுதி
பிடி மண் காதலுக்காய் ஏங்குகிறேன்;
அதனுடன் நீ எங்கு சென்றாய்?

 

உருகி உருகிக் காதலித்து
உடல் புதைத்துச் சாதல் செய்து – விழி
மடல் அழுகக் காத்திருப்பேன்; – இதை
மடல் எனக் கொண்டு உடனே வா!

August 12, 2009

கலைந்த காலையொன்றில்
பரந்த உன் தோள் சேர்ந்தேன்;
குலைந்த என் கேசம் கோதி
உயிர் களைந்து வெளியில் போட்டாய்;

 

இதழ் பற்றி இதழ் சேர்த்து – உன்
உயிரிங்கு அனுப்பி வைத்தாய்;
இரு உயிர் கொண்டதனால் என்
இருதயமோ துடிக்கவில்லை;

 

கை பற்றி ரேகை பார்த்தாய்;
வலக்கையும் பொருந்தக் கண்டாய்;
எனக்கென்று நீயான பின்பு
சாத்திரங்கள் என்ன செய்யும்?

 

காதல் இப்போதுதான் திரும்பி
உன் நலம் கேட்டதென்றாய்;
உன் காதல் என்னிடமிருக்கையிலே
எப்படி நீ காதல் செய்வாய்?

 

உயிர் உருகி சாய்ந்த பொழுதில் – என்
உச்சந்தலை இதழ் பதித்தாய்;
வழிந்த உயிர் பருகிக் கொண்டு
வாழ்ந்து பார்க்க எனை அழைத்தாய்!

 

கழிந்து போகின்ற கணங்கள்
பொழிந்து போகின்றன எனக்குள் உன்னை;
நிறைந்து வழிகின்றது என் உலகம் – அது
சுழல்கிறது உன்னைச் சுற்றி!

 

உன்னருகில் கரையும் நொடிகள்
நீள்கின்றன என்னுடன் எனும்போது;
நின்று யோசிக்கிறேன் ஒரு கணம்;
நீயில்லாது போனால் நான்தான் என்னவாவேன்?

 

உன் தோள் சாய்ந்து தினம்
மடிந்து நான் போக வேண்டும்;
விடிகின்ற போதில் புதிதாய் – உன்
மனமிருந்து உயிர்க்க வேண்டும்!

 

தவமிருந்து உனைச்சேர்ந்து கணமும்
உயிர் நிறைய வாழ வேண்டும்;
முடியாது எனும் போது உன்
மடியில் மரிக்க வேண்டும்;

என்னதான் ஆனபோதும்!

Author: நதியானவள், August 11, 2009
August 11, 2009

சோவென்று கொட்டும் மழையில்
ஓவென்று அழுகுதென் இதயம் – எதிரிக்
காவொன்றுள் அகப்பட்ட மானாய் – மனம்
பூவாக உதிர்ந்தும் போகும்.

 

பட்டெனக் கிழியும் கனவு – கூட
நட்டென வலியும் தரவும்
சட்டென்று அலறுது ஆண்மா – அதை
விட்டென்று கலைக்குது காலம்.

 

எனக்கென்ற நம்பிக்கை கூடி – நான்
நினக்கென்று கூத்துமாடிக்
கணத்தொன்றும் உன்னைப் பாடிப்
பிணத்தொன்றாய் வடிந்தும் போனேன்.

 

தவறுண்மை கண்டுமறிய – தினம்
தவநூறு விவாதம் வைத்தேன்
பாவிகள் தட்டிய கதவாய் – அதில்
பலனொன்றும் கிடைக்கவில்லை.

 

ஆழிகள் பொங்கிப் பெருகும் – என்
ஆன்மாவும் விம்மி வழியும்
மடல் தாண்டி வீங்குமென் கண்கள் – என்
மனம் போலவே தேம்பி இருக்கும்.

 

பனி வழியும் வீதி நோக்கிக்
கனிவுடன் முகத்தைப் பார்க்கின்
வனிதையின் வாழ்க்கை போல – அது
நுனிகளில் கலங்கியிருக்கு.

 

உன்னுடன் கொண்ட காதல்
என்னுடன் தங்கிப் போக – நான்
பண்ணுடன அறுந்த வீணையாகி
மண்ணுடன் உக்கிப் போனேன்.

 

உயிர் இங்கு அலறினாலும் – காதல்
கயிறிங்கு அறுந்திட்டாலும்
ஆயிரம் கோவிலேறித் தினம்
பாயிரம் கூவிக் கேட்பேன் – என்
இருதயம் உள்ள மட்டு – உன்னை
நிருத்தியம் நினைக்கவென்றே!!!!