ஏகாந்தம்!
Author: நதியானவள், September 19, 2009வானத்துக்கும் பூமிக்குமாய்ப் பனிப் புகார் முகாமிட்டிருந்த போது தான்
தொங்கு பாலத்தடியில்
தொங்கிக் கொண்டிருந்த
வியாபிப்பு!
Author: நதியானவள், September 13, 2009குமிழ்த்த நீராய் என்னுள் நீ!
எத்தனையாவது!
Author: நதியானவள், September 13, 2009கிளிஞ்சல்கள்;
ஏதேச்சையாக எடுத்ததில்
எழுதப்பட்டிருந்தது;
கடல் கரைக்குத் தந்த
இத்தனையாவது முத்தம் என்று!
ஊருணி!…
Author: நதியானவள், September 13, 2009ஊறிக் கொண்டேயிருக்கிறது
என் மனம்;
உன் நினைவுகளில்!
ஊ(ற்று)ர்க் கிணறு போல!
மீந்த என் நொடிகள்!
Author: நதியானவள், September 9, 2009காதலுக்கான காத்திருப்பில்
மரணித்த நொடிகளின்
கடைசி ஆசைகளைக் கூட
நிவர்த்திக்க முடியவில்லை என்னால்;
மரண பயத்தில் அவை
மண்டியிட்ட போதும்
காதலின் சிலுவையில்
ஆணிகளாகின்றன என்று
பெருமை பிசத்திக் கொண்டேயிருந்தேன்!
குறுக்கும் நெடுக்குமாய்
அவற்றுக்கான கல்லறைகள்
அடுக்கப் பட்ட போதும்
அசையவில்லை நான்;
பூக்களைப் பிடுங்கும் போதான
வலிகள் தாங்க முடியாததால்
அவற்றுக்கான மாலைகளை
என் கண்ணீராலேயே செய்தேன்;
மார்கழி பெய்த மழையில்
மாய்ந்து மாய்ந்து நனைந்தும்
கரைக்க முடியவில்லை
அவை தந்து போன சாபங்களை!
ஏங்கிச் செத்தவற்றை
அடக்கம் செய்யத்
தோண்டித் தோண்டி
சிதைந்தே போனது என் பூமி!
சில நொடிகள் பாவம்;
என்னைப் புரிந்ததால்
தாமாகவே தற்கொலையில்
உயிரை விட்டன!
முகாரிகளில் ஒப்பாரியிட
முடியாது போனதால்
மனதுக்குள்ளேயே ஓதினேன்;
அஞ்சலியையும்; தனிமையையும்;
காத்திருப்பதில்லை என்று
உயிரும் நானும்
சாசனம் எழுதிய பின் தான்
நீ வந்தாய்!
என் நொடிகள் மீண்டும்
கொலை செய்யப் படலாயின;
உன்னால்!
மன்னித்து விடு காதலே;
இறந்த நொடிகள் போக
மீந்தவற்றுக்காகவாவது
வாழ வேண்டும் நான்!
என்றுரைத்த பின்பு
உயிர்க்கத் தொடங்கின
என் நொடிகள்!
என் முதல் பிரசவம்!
Author: நதியானவள், September 7, 2009வலிகள் கூடி மரத்துப் போய்
மருண்டது அழுதபோது
ஒரு தாயாகி எனக்கதை
கர்ப்பம் சுமக்க மட்டுமே முடிந்தது!
முந்நூறு நாட்கள் தாண்டி
முக்கோடி நாழிகள் நீண்ட பின்பும்
பிரசவிக்க முடியாது
பிதற்றிக் கொண்டேயிருந்தேன் நான்!
கடல் கொண்ட பிடி மணலாய்
இப் பிரபஞ்சம் என்னை முளுங்கியபோது
கற்போடு இருப்பதிலும் – என்
கர்ப்பங் காப்பதிலேயே தொலைந்தேன்!
உறவுகளும்; பிரிவுகளும்;
உயிர் வழியும் உயிர் வலியும்
நீட்டிக் கொண்டேயிருந்தன
என் கர்ப்ப காலத்தை!
பொய்மைகள்; கயமைகள்;
துரோகங்கள்; தோல்விகள்;
என் மனவிலாசத்துக்கு
தினமும் அஞ்சலிடப்பட்டன!
ஆனால்; நரிகள் கூடிப் போன
நடுக் காட்டு வழி நடந்த போதும்
முகமறியாக் கருவை முத்தமிட
காதலை மட்டுமே அனுமதித்தேன்!
என் நிழலும் கவியெழுதும்
என்றான பின்பு
என் நிலவும் பொழிந்தது
எண்ணில்லாச் சூரியன்களை!
உச்சியிலே உருவாகி
பச்சையிலே உயிராகி
இச்சையிலே திசையேகி
கடலேகும் நதியான பின்பு;
நேற்றுத் தான் பெற்றெடுத்தேன்;
என் மனதை!
சார்ந்த கரை தேடி
சேர்ந்த கறை கழுவி
ஊர்ந்து போகும் நதியான பின்பு
உயிர் முடக்கும்
தீக் கர்ப்பம்தான் எதற்கு!
என் மனம்;
இந்த நதியின் குழந்தை!
காதல் குழந்தை!
Author: நதியானவள், September 4, 2009இரத்தமும் சதையும் வழியக்
குறை மாதத்தில் குற்றுயிராய்ப்
பிரசவித்தபடியே கிடக்கிறது
காதல் குழந்தை!
வலிகளில் தாய் வாசங் கண்டு
வாயைச் சப்புக் கொட்டி
உயிரலரக் கத்தியபடி
வழியிலேயே கிடக்கிறது!
வழிப் போக்கர்களை நிறுத்தி
தன் பெற்றோர்களைக் கேட்டு
தெரியவில்லை எனும் பதிலில்
தெருவிலேயே தொலைகிறது!
நாகரிக நாய்கள் அறியாது நக்கிய
செக்குகளும் சிவலிங்கங்களும்
பொத்திப் பொத்திக் கருக் கொண்டதில்
காதல் தான் குற்றுயிராய்!
கர்ப்பத் தடை பெருகினாலும்
காதல் தடை அறியாததில்
வத வதவென்று எங்கும்
முளைத்து நிற்கின்றன காதல் குழந்தைகள்!
விளங்காத கனவுகளும் – கொஞ்சம்
விளங்கிப் போன உணர்வுகளும்
புணர்ந்து பெத்துப் போடும்
எல்லாமே காதல் தானா?
ஆனால்; என்னதான் செய்ய;
இரத்தமும் சதையும் வழியக்
குறை மாதத்தில் குற்றுயிராய்ப்
பிரசவித்தபடியே கிடக்கிறது
காதல் குழந்தை!
என் மூச்சு!
Author: நதியானவள், August 27, 2009எனக்காக சுவாசிப்பதை
எப்போது நிறுத்தினாய் நீ!
காதல் மட்டும்
Author: நதியானவள், August 26, 2009தொலைந்து போனதா; எது?
என் உலகம்!
எங்கே போனாய்; நீ?
பேசிக்கொண்டிருந்தேன்;
அப்போதா; யாருடன்?
என்னுடன்!
உன்னுடன்; எதைப் பற்றி?
களவு போன என்னுயிர் பற்றி!
உயிர் இருக்கிறதா? யாரிடம் அது?
இன்னும் தகவல் இல்லை!
சரி; சூரியன் எங்கே?
தொலைந்து போனதாக நினைவு!
நிலாவாவது?
அப்படி என்றால்!
அப்போ எதுதான் இருக்கிறது?
வெறுமை!
யார் யார் உறவுனக்கு?
எல்லோரும் தொலைந்ததாக கனவு!
ஐயோ;
எல்லாம் தொலைத்து; நீயும் தொலைந்து;
அப்படி என்னதான் செய்கிறாய் நீ?
காதல்!…….
காதல் மட்டும்!…
எனக்கென்ன வேண்டும்?
Author: நதியானவள், August 23, 2009வானத்தை வளைக்க வேண்டாம்;
பூமியைப் பிளக்க வேண்டாம்;
காற்றைக் குடிக்க வேண்டாம்;
நெருப்புமேன்? வேண்டவே வேண்டாம்!
கொத்துக் கொத்தாய்க் கட்டியிருக்கும்
செத்துப் போன பூக்கள் வேண்டாம்;
வேறொருவர் கனவு பேசும்
உணர்வில்லா மடல்கள் வேண்டாம்!
வைரங்கள் வேண்டாம்; – அட
தங்கமே வேண்டாம்;
மழைத்துளி களவெடுத்து
சிப்பி தரும் முத்தும் வேண்டாம்!
கண்ணே; மணியே; வேண்டாம்!
எனக்காக சாதலும் வேண்டாம்;
மன மாடங்கள் வேண்டாம்; – எனக்கு
மணி மாடங்களும் வேண்டாம்!
உணர்வுகள் ஓங்கிப் போக
உயிரது தேடி ஏங்க
காதல் என்று வரும்போது
அன்பே நான் கேட்பதெல்லாம்;
கண் பார்த்து; என் கண்ணுள் பார்த்து;
நின் காதல் உரைக்க வேண்டும்!
அளவில்லா உன் அன்பில் – நான்
அமைதி கண்டு வாழ வேண்டும்!
தோற்கிறேன் என்று தோன்றினால்
சாய உன் தோள் வேண்டும்!
சாகின்றேன் எனத் தோன்றும் போது
உயிர் தந்து போக உன் கை வேண்டும்!

