நிதானித்த பால்யம்

Author: நதியானவள், February 25, 2010
February 25, 2010

பரட்டைத் தலையுடன்
படலைகளில் காய்ந்ததிலும்
எச்சில் மிட்டாய்களுக்காய்
ஏவல்கள் செய்ததிலும்
சட்டையின் பூக்கள் நிறம்
ஒட்டியிருக்கும் ஊஞ்சலிலும்

மண் சோறு தின்ன வந்த
அணில்களும் புலுனிகளும்
தீரத் தீரப் பேசிப் பின்னும்
எஞ்சியிருந்த பொழுதுகளிலும்
மாம்பூக்கள் ஆசிர்வதித்த
மஞ்சள் மாலைகளிலும்

 

 

நிதானமான நிமிடங்களுடன்
நீட்சித்துக் கிடந்தன
பால்யத்தின் நாட்கள்
தெருவின் புழுதிக்குள்
கொலுசின் மணிகளோடு
கழன்றனவாகின கனவுகள்
நான் படிப்பிக்காததால்
தோற்றிருந்தது நித்யகல்யாணி
தேற்றியபடி நாய்க்குட்டி

 

 

பனிகளுக்குள் பூத்திருந்தது
வாடாமல்லி வாசமற்று
ஈச்சம் பழத்தின் நிறம்
மறந்துவிட்டிருந்தது
இன்று காலையில்
நிதானித்தே போயிருந்தன
பால்யத்தின் நாட்கள்

 

2 Responses to “நிதானித்த பால்யம்”

  1. vitalan Says:

    இந்த கவிதை பால்ய காலத்திற்கு அழைத்து செல்கிறது .
    நன்றி தொடர்கிறேன்

    தேவராஜ் விட்டலன்
    அஸ்ஸாம்

    http://vittalankavithaigal.blogspot.com/vittalan@gmail.com

Leave a Reply