நான் இருந்தேன்

Author: நதியானவள், December 11, 2009
December 11, 2009

என் சோற்றுப் பருக்கைகளில்
உன் பெயர் எழுதப்பட்டு
அழிக்கப்பட்டிருக்கவேண்டும்
உண்ணும் போது
உன் நினைவு வந்தது

 

சாலை கடக்கையில் எனக்குக்
கை காட்டிய சிறுவன்
நீயாகத் தெரிந்தாய்
அப்போது சிரிக்கவும் செய்தாய்

 

இலக்கற்று அலைந்த மேகத்தில்
மழை கருக்கட்டியதை
நான் ரசித்தபோது
அந்த வெள்ளத்தில்
நீ மூழ்கிக் கொண்டிருந்தாய்

 

இசை மீட்டி யாசித்த
முதியவனின் வயலின்
உன் ஏந்திய கைபோல
வளைந்து தெரிந்தது
அதன் இசையில் உன் குரல்
இழைந்து இழைந்தது

 

மார்புறிஞ்சிக் கண்ணயர்ந்த
பிஞ்சொன்றைக் காண்கையிலே
நீ தாயிழந்து நின்று
ஓவென்று அலறியதும்

 

கந்தல் உடை கட்டி
காணமல் போன தந்தை தேடி
விந்தி விந்தி நீ
வீதிகளில் திரிந்ததுவும்

 

பெருந் தெருக்கள் தாங்கும்
நியோன் விளக்குகளில்
நின் விழியின் கண்ணீர்
தளும்பி வழிந்ததுவும்

 

என் அடி மனதில் ஊறி
ஊழித்தாண்டவம் ஆடி
உலுக்கிப் போட்ட போதும்
நீ என் நினைவில் இருந்தாய்

 

இன்னொரு கவிதை பற்றி
இந்தக் கவியூடு எண்ணி
எழுதி முடிக்க முன்
நீ மரித்திருந்தாய்
என் மகவே
அப்போதும் நான்
உன்னை நினைத்துக் கொண்டே இருந்தேன்
நினைக்க மட்டுந்தான் இருந்தேன்

 

2 Responses to “நான் இருந்தேன்”

  1. Vijay Says:

    மிகவும் அரு​மையாக உள்ளது
    அ​னைத்து​மே வித்தியாசமான கற்ப​னை

    //இசை மீட்டி யாசித்த
    முதியவனின் வயலின்
    உன் ஏந்திய கைபோல
    வளைந்து தெரிந்தது
    அதன் இசையில் உன் குரல்
    இழைந்து இழைந்தது//

Leave a Reply