கண்ணில்லாக் கண்ணாடி

Author: நதியானவள், November 29, 2009
November 29, 2009

என் கண்ணாடிக்கு
கண்கள் முளைத்திருந்ததை
இன்று அதிகாலைதான் பார்த்தேன்

 

நான் எதிர்பார்த்ததை விட
அகோரமாக இருந்தது
நான் அழகாகத் தெரிந்தேன்

 

ஆனால் அதன் கோர விழிகள்
என்னை நிராகரித்து
எனக்குள் இறங்கின

 

கண்ணாடியின் நீள் கரங்கள்
என்னுடல் கிழித்து
உள்ளே பதிந்து
நார் நாராய் நார் நாராய்
இழுத்துக் கொண்டே இருந்தன

 

இது என்ன
எதன்மேலான ஆசை இது
மேலும் என்னென்ன
காயங்கள்
வலிகள்
கலைந்த கவிக்கருக்கள்
இன்றிரவுக்கான கனவு
நாளைக்கான பயம்
அடுத்த நொடிக்கான பொய்
இன்னொன்றிலான பொறாமை
ஏன் நேற்று, முந்தய நாள்,
முதல்மாதம் அதற்கு
முந்திய வருடக் காதல்கள்
துரோக நட்பு
அப்பப்பா ஆயிரம் ஆயிரம்

 

கழிவுச் சாக்கடைக்குள்
அமிழ்ந்த ஒரு ஊரின்
பிணக்குவியல் போல
கணக்கற்று கணக்கற்று

 

பொல பொலவென உதிர்ந்த
புற உடம்பை அள்ளி
பொட்டலங் கட்டிஎடுத்து
என் முன்னே கடை பரப்பியது
கண்ணாடி

 

ஒரு தலைச் சிலுப்பலில்
மீண்டும் வளர்ந்தது உடல்
சாக்கடைப் பிணங்களை
மீண்டும் தின்று கொண்டே
கண்ணாடி பார்த்தது

 

நான் மிக அழகாகத் தெரிந்தேன்
கண்களிருக்கவில்லை
அதற்கு
இப்போது எனக்கும்

 

Leave a Reply