நினைவு வன்புணர்ச்சி
Author: நதியானவள், November 28, 2009November 28, 2009
அகோர நினைவுகளைப் பிரசவித்த
அசிங்கத் தழும்புகள் பல
என் வயிறெங்கும்
நான் மார்பு கிழித்தெறிந்த
அவற்றின் எச்சங்கள் பல
என் வழியெங்கும்
முண்டங்களெல்லாம் சேர்ந்து
முடிவிலியில் சந்திக்கின்றன
பிறிதொரு நாளில் எனை
இம்சிப்பது பற்றியும்
இன்னொரு மன வன்புனர்வுக்கான
இரகசிய ஆயத்தம் பற்றியும்
சூடாகவே விவாதிக்கின்றன
பிண நாற்றங்களிடையில் திமிறி
தன் மூச்சையே தேடும் உயிர்
வெற்று நெஞ்சுக் கூட்டில்
காதல் இருப்பதாகப் பிதற்றுகிறது
அது கனவில் இருக்கிறது
எதிர்பாராத கணத்தில் நடக்கும்
நினைவு வன்புணர்ச்சிகளில்
களைத்துக் கிடக்கிறது மனம்
காதல் பற்றிக் கதைக்க
அவற்றின் வாய் தேடுகிறது
எனினும் நீளும் வலிகளின் போது
முண்டங்களே பிரசவமாகின்றன
அவை முடிவிலியிலேயே தான்
சந்திக்கவும் செய்கின்றன

