Archive for December, 2009


கொஞ்சமாய் எனக்குமாய்!

Author: நதியானவள், December 30, 2009
December 30, 2009

நிதர்சனங்களின் கற்பிதங்கள்
நீளமாக இருக்கின்றன
என்னால் ஒருமுறையேனும்
வாசிக்க முடியாதனவாக

 

அந்த எண்ணற்றவைகளுக்குள்
சிலவற்றைத்தான் விளக்கினாள் அம்மா
இன்னமும் விளக்கிக் கொண்டே

 

நடை குறித்த கவலைகளிலும்
உடை பற்றிய விவாதங்களிலும்
அவளை முத்தமிடல் என்பது
சாத்தியப்படுவதாக இல்லை
புன்னகைத்தல் கொஞ்சம்
சுலபமாக இருக்கிறது

 

நின்று நடக்க நினைப்பினும்
அவளின் கைத்தடியின் நீளம்
எட்டக் கூடியதாகவும்
முட்ட மட்டும் முடிவதாகவும்
அம்மா “பாரதி” படித்திருக்கவில்லை

 

களிமண் உட்செரித்த நீர்
பின்னொரு நாளில்
சிலையில் வடிந்ததை
நான் நம்பவில்லை
அப்படியே இதையும்
பாரதிக்காய்
கொஞ்சம் எனக்குமாய்


மறு தாக்கம்

Author: நதியானவள், December 18, 2009
December 18, 2009

பிரட்டிப்போட்ட கரப்பானின்
பிய்ந்து கொண்டிருக்கும்
இறகுகளுக்குள்ளிருந்து
எட்டிப் பார்க்கிறது மனது

 

 

சாத்தியப்பாடுகள் தரும்
நிகழ்தகவுகளின் அன்புகளில்
நெரிந்து வாழப் பழகுகிறது
நசிந்த உயிர்

 

 

பெயர் எழுதப்படாத கண்ணீர்
யாருக்குமே இல்லாமல் வழிய
பிணமாகக் கனக்கிறது
மௌனம்

 

 

ஆழ் மனதுக்குள் அலையும்
உருவற்ற கருவைத்
துரத்துவதொடு நிற்கிறது
கவிதை

 

முற்றுப்புள்ளிகளற்றுப் போன
இறுதிக் கவிதையின் முடிவாய்
மிஞ்சி விளைகிறது
காயம்

 

நிரந்தரமற்ற தூக்கத்தில்
நெருடும் விடியலில்
காற்றில் கீறுகிறது
பாச விரல்
இன்னொரு கரப்பானை
இறுகப் பிடித்தபடி


நான் இருந்தேன்

Author: நதியானவள், December 11, 2009
December 11, 2009

என் சோற்றுப் பருக்கைகளில்
உன் பெயர் எழுதப்பட்டு
அழிக்கப்பட்டிருக்கவேண்டும்
உண்ணும் போது
உன் நினைவு வந்தது

 

சாலை கடக்கையில் எனக்குக்
கை காட்டிய சிறுவன்
நீயாகத் தெரிந்தாய்
அப்போது சிரிக்கவும் செய்தாய்

 

இலக்கற்று அலைந்த மேகத்தில்
மழை கருக்கட்டியதை
நான் ரசித்தபோது
அந்த வெள்ளத்தில்
நீ மூழ்கிக் கொண்டிருந்தாய்

 

இசை மீட்டி யாசித்த
முதியவனின் வயலின்
உன் ஏந்திய கைபோல
வளைந்து தெரிந்தது
அதன் இசையில் உன் குரல்
இழைந்து இழைந்தது

 

மார்புறிஞ்சிக் கண்ணயர்ந்த
பிஞ்சொன்றைக் காண்கையிலே
நீ தாயிழந்து நின்று
ஓவென்று அலறியதும்

 

கந்தல் உடை கட்டி
காணமல் போன தந்தை தேடி
விந்தி விந்தி நீ
வீதிகளில் திரிந்ததுவும்

 

பெருந் தெருக்கள் தாங்கும்
நியோன் விளக்குகளில்
நின் விழியின் கண்ணீர்
தளும்பி வழிந்ததுவும்

 

என் அடி மனதில் ஊறி
ஊழித்தாண்டவம் ஆடி
உலுக்கிப் போட்ட போதும்
நீ என் நினைவில் இருந்தாய்

 

இன்னொரு கவிதை பற்றி
இந்தக் கவியூடு எண்ணி
எழுதி முடிக்க முன்
நீ மரித்திருந்தாய்
என் மகவே
அப்போதும் நான்
உன்னை நினைத்துக் கொண்டே இருந்தேன்
நினைக்க மட்டுந்தான் இருந்தேன்


தண்ணீர்ப் பாம்புகள்

Author: நதியானவள், December 10, 2009
December 10, 2009

ஆழ்கிணற்றுக்குள் யாரோ
அள்ளிக் கொட்டிய இருட்டைக்
கிள்ளிப் போடுவது பற்றியும்
துலாவின் வாளி விழ எழும்
பிலாக்கணத்தை நிறுத்துவது குறித்தும்
தண்ணீர்ப் பாம்புகளை விடத்
தவளைகள்தான் கவலைப்பட்டன

 

படிகளில் குறிக்கப்பட்ட தத்தம்
பரம்பரைப் பெயர்கள் கொண்டே அவை
நீதிமன்றக் கூடுகளில்
அழைக்கப் பட்டிருந்தன

 

கோப்புகளுக்கும் வாய்தாக்களுக்கும்
நீர்ப்பாம்புகள் தலையைக் காட்டின
அதில் பல பெண்களாக இருந்தன
சில வாற்பேத்தைகளும்

 

நிலாவின் நிழல் விழுந்த
அரைகுறை இரவொன்றில்
“பாம்புகள் படியேற”
விதிகள் செய்யப்பட்டதாக
தவளைகள் கத்தின
அடுத்த மழையில் செத்தன

 

பின்வந்த அமாவாசையில்
பிசைந்த இருட்டில் நின்று
பாம்புகள் தீர்ப்பைப் படித்தன
தங்களின் காதுகள்
செவிடாகிப் போனதனால்
காத்திருக்கத் தொடங்கின
வாற்பேத்தைகளுக்காக
இப்போதும்


சிந்தாமல் விட்ட துளி

Author: நதியானவள், December 2, 2009
December 2, 2009

கண் ஓட்டைகளுக்குள்
இவ்வளவு குருதியிருக்குமென்று
நான் நினைதேயிருக்கவில்லை

 

அது உதடு நனைக்கும் போதான
உவர்ப்பை என்னால்
எப்போதுமே ரசிக்க முடிவதில்லை

 

என் நெஞ்சு சாற்றை உறிஞ்சி
எப்போதாவது வழியும் துளி
இனிக்கவும் செய்கிறது

 

பலவேளைகளில்
தாடை இறுக்கி
காற்றின் மூச்சு நிறுத்தி
விசும்பலின் கழுத்துத் திருகி
விக்கலில் முடிக்கையில்
நறுக்கென்ற ஒரு வலியுடன்
தன்னிருப்பை சொல்லி
துளியை உள்வாங்குகிறது
இதயம்

 

கூர்ப்பின் பரிணாமத்தில்
இன்னொன்றாக மாறி
என்னை ஆளத் தொடங்குகிறது
நான் சிந்தாமல் விட்ட அந்த
செங்குருதித் துளி