Archive for October, 2009


என் ஒரு நாள்

Author: நதியானவள், October 27, 2009
October 27, 2009

ஒன்றுமே செய்யாமல் போனதற்காய்

ஓவென்று அழும் நொடிகளால்

நிரம்பிக் கிடக்கிறது

என் அறையின் குப்பைத் தொட்டி
நேற்றயதுகளில் புதைந்த
இன்றயதுகளுக்கான மனதைத்
தேடி தொலைந்தேனென்று
தாம் தூமென்று குதிக்கிறது பாதி நாள்
தவணை சொல்லி மீண்டெழுந்தால்
கழியும் கணங்கள் போக
மீதியில் வாழும் லாவகங்கள்
கைவரவில்லை உனக்கென்று
குற்றம் சுமத்துகிறது மீதி
அப்படியா என்று நான்
கேட்டு அழ முன்னமே
பிறந்துவிடுகிறது
எனக்கான அடுத்த நாள்

இலையுதிர்வது – அது காலம்

Author: நதியானவள், October 27, 2009
October 27, 2009

உதிரும் இலைகளின் வடுக்களைச் சுமந்து
நெடுமென நிற்கிறது கால மரம்
இறைந்து கிடக்கின்ற சருகுகளுடன்
காய்ந்து கிடக்கின்றன மனத் துகள்கள்

 

பாதி மனதுதான் பாவம்
உச்சியில் கூடு கட்டி
கீழிருக்கும் மீதிக்காய்
ஓர் ஒப்பாரி முடிக்கிறது

 

எப்போதோ பொழியும் ஒரு மழையில்
துளிர்க்கிறது சிறு தளிர்
இப்போது மனது கீழே பார்ப்பதில்லை
அதற்கு தளிருடன் வேலையிருக்கு

 

காலமரத்தின் இன்னொரு வளையத்தில்
அது இலையாக உதிர்க்கப் படலாம்
மரத்துக்கு இதைப் பற்றித்
துளியூண்டும் வருத்தமில்லை

 

 

மிஞ்சிய மனம்தான் விம்மும்
அடுத்த மழைக்கான காத்திருப்பில்
இன்னொரு ஒப்பாரி இசைக்கும்
அது அடிக்கடி குனிந்து பார்க்கும்


தொடரும் காதல்கள்

Author: நதியானவள், October 27, 2009
October 27, 2009

ஊசிக் குளிரில்

உறைந்து கிடக்கிறது
உயிர்
 
என் தெருவெங்கும் பூத்திருக்கும்
பனிப் பூக்களினடியில் கிடக்கிறது
நீ எங்கோ ஏகியதுக்கான
தடங்கள்
தொடரும் கோடைகளில்
கரையும் பனிகளில்
குளங்கள் கட்டி நிற்கிறது
காலம்
 
இறங்கித் தேடவும்
இடமும் தராமல்
கொட்டித் தீர்க்கிறது
தனிமை மழை
 
நான் பிறப்பதற்கு
முன்னோ கூடவோ
நீ பிறந்ததன் அடையாளங்கள்
அதிலே அழிகின்றன

 

 

எங்கோ நீ இருப்பாய்
என்பதான கனவில்
காதல் கொள்கிறது
என் கவிதை
 
 
அதன் வரிகளில் வழியும்
வலிகளில் மீண்டு – மீண்டும்
ஊசிக் குளிரில்
உறையத் தொடங்குகிறது
உயிர்
இன்னொரு கோடை
அதோ
வந்து கொண்டேயிருக்கிறது

உனக்குள்ளே என்றாகட்டும்…..

Author: நதியானவள், October 19, 2009
October 19, 2009

கண்ணுள் பரவிக் கிடக்கும்
குருதிக் குழாய்களினால்
கனவுகள் மட்டுமே
விநியோகிக்கப்படுகின்றன

 

எப்போதாவது கனத்துப் போகும்
என் கண்மடல்களின் வழி
வழிந்து போகின்றன அவை

 

என் காலடிகளிட்கு வெகு அருகில்
காய்ந்து போய்க் கிடக்கின்றன

 

என்னைத் தொடரும் உன்
ஈரப் புன்னகைகளில்
அவை மீள உயிர்ப்பிக்கப் படலாம்
இல்லை உன்னால் தொடரப்படும் பாக்கியம்
என்னால் இழக்கப்படலாம்

 

எது எவ்வாறெனினும்
அவ்வப்போது ஊட்டப்படும்
உன் நினைவுகளில் சிவக்கும் கண்களில்
உதிராமல் இருக்கிறது
உனக்கான என் காதல்

 

நீ பின்தொடரினும்
தொடராது போயினும்
அது வழியாது
உலராது

 

கண் வழிதான் உயிர் பிரியும்
அப்போது தான் காதல் வழியும்
அது உனக்குள் என்றாகட்டுமே


காதலின் மேல் ஒரு நட்பு

Author: நதியானவள், October 15, 2009
October 15, 2009

நீளும் மயான வெளிகளில்
தூங்கிக் கிடந்த நிசப்தத்தைக்
கிழித்துப் போட்டதல்லால்
வேறொன்றும் செய்யவில்லை
உன் குரல்

 

துயின்றிருந்த நினைவுக் குழந்தைகளை
மீண்டும் தாலாட்டுவதுதான்
பெரும் பாடாகிப் போனது எனக்கு

 

பொட்டல் வெளிகளில்
கொட்டும் மேகத்துக்கும் எனக்கும்
யாதொரு சம்பந்தங்களும் இல்லை
என் உயிர் நனைக்கும் துளியை
எந்த வானமும் கருக் கொள்ளவில்லை

 

கண்கள் வழியும் கனவுகளை
வாசிக்கத்தான் உன்னால் முடியும்
என் மன ஊருணியின் ஆழங்கள்
ஆபத்தானவை
அவற்றுக்குப் பலி கொடுக்க
உன்னைத் தயார் படுத்த முடியாது

 
என் சுயங்களைப் பதுக்கி
உன் கருத்துக்களில் வாழ
என்னால் முடியாது
என் காதலுக்கான ஒரு கவிதையில்
பிறக்கும் காதலை
இன்னொன்றுக்காக நொடியில்
கொன்றே போடுகிறேன்
இது நிஜத்தில் முடியுமென்றிருக்கிறாயா?

 

உன் காதல்
என் நட்பு
சிறு இடைவெளியில்
நூற்றாண்டுகளுக்கான தூரம்
என்னால் கடக்க முடியாது

 

வழிப் போக்கர்களை பிரிகையிலே
வலித்துப் போகும் போது
நட்பைப் பிரிதல்
வலிக்காதா என்ன?

 
வலிகளில் வடியும் குருதியின்
பசைகளில் ஒட்டி இருக்கிறது
மீந்த நேசம்
இன்னொரு சந்தர்ப்பத்தில்
இன்னொரு காதலில்
உனக்கு நிச்சயம் பயன்படட்டும்

 

உன் காதலின் மகரந்தங்களில்
என் நட்பெனும் பூ கற்பிழக்க வேண்டாம்
காதலை கீழே போட்டு
நட்புக் கோபுரங் கட்டும்
துரோகங்கள் எனக்கு வேண்டாம்

 

சற்று விலகு
தள்ளி நின்று அழு
என் மயானங்களின் நிசப்தத்தில்
தூங்கும் என் நினைவுகளை
மீண்டும் எழுப்பாதே
நான் இவ்வளவுதான்
இப்படித்தான்

எனக்குத் துரோகங்கள் தெரிய வேண்டாம்

தெரியப்படுத்தப் படவும் வேண்டாம்


எழுந்து வாருங்கள்

Author: நதியானவள், October 13, 2009
October 13, 2009

எழுந்து வாருங்கள்
என் வீரத் தமிழர்களே
நாம் மரணிப்பதற்கு முன்னும் பின்னும்
செய்யவேண்டியவை கோடி

 

ஆண்டாண்டு காலமாய்
ஆண்ட எம் மண்ணை
அந்நியன் ஆள விட்டுப் போகலாமா?

 

தமிழ் காத்த எம் குலத்தை
எவனோ ஒருவன் அழிப்பதுவா
எம் குலப் பிஞ்சு துயில
ஏதோ ஒன்றில் தாலாட்டா

 

நான்கு சுவரைக் கட்டி
நான்காயிரம் ஆணையிட்டு
நாளைய சந்ததிகளின்
நாட்கள் எண்ணப்படுவதா

 

கவரிமான் ஒப்ப
கற்புக் காக்கும் எம் குலத்தில்
கறுப்பு ஆடுகளின்
கர்ப்பங்கள் தங்குவதா

 

எழுந்து வாருங்கள்
என் வீரத் தமிழர்களே
நாம் மரணிப்பதற்கு முன்னும் பின்னும்
செய்யவேண்டியவை கோடி

 

கொட்டும் மழை நிறுத்திக்
கொப்பளிக்கும் மின்னல் கட்டி
இழுத்து வாருங்கள் அந்த இடியை
“இத்தால் நாம் அறிவிப்பது என்னவென்றால்”
என்று அறையுங்கள் முரசை
கலையட்டும் இவ்வுலகின் தூக்கம்

 

எம் கண்கள் வழிந்த கண்ணீரில்
ஏன் உப்பளங்கள் செய்தாயென்று
கேட்டுக் கத்துங்கள் தோழர்களே
உங்கள் பெருகும் துளிகளில்
பொங்கிக் கொக்கரிக்கட்டும் கடல்கள்
மூழ்கட்டும் இந்தப்
பாழ்பட்ட பொய் உலகு

 

 
எங்கள் உயிரின் வலியில்
அறிக்கைகளை மட்டுமே போட்டு
காயங்களைக் குடைந்து குடைந்து
ஏன் எங்களுக்கு நஞ்சு வைத்தீர்கள் என்று
கதறுங்கள் தமிழர்களே
உங்கள் நாப்பிறக்கும் விஷத்தில்
நஞ்சாகட்டும் காற்று

 

காணாமல் போவதற்கா நாம்
தாய் வயிற்றில் கருவானோம்
எங்கே தொலைத்தீர்கள் எங்களை?
ஏன் தொலைத்தீர்கள் எங்களை?
எங்கள் சுயமழிக்க நீங்கள் யார்?
எழுந்து கேளுங்கள் தோழர்களே
உங்கள் கேள்விகளில்
தொலையட்டும் இவ்வுலகு
தொலைந்தே போகட்டும்

 

முறம் கொண்டு புலிவிரட்டி
முலைப்பாலூட்டிய தமிழ்த்தாயின் மடி
முளைத்த வீரர்கள் நாம்
எமையழிக்க உம்மால்
எப்படி முடியுமென்று
அறையுங்கள் உங்கள் முரசுகளை
உலகத்தின் செவிப்பறைகள்
கிழிந்தே போகட்டும்

 

உங்களுள் எரியும் பொறிகளைக் கொட்டி
உருவாக்குங்கள் எரிமலைகளை
விதைத்துப் போங்கள் இத் தரணி எங்கும்
பெத்துப் போடுங்கள் அக்கினிக் குஞ்சுகளை
கெக்கலித்துப் பரவட்டும் தீ
எரிந்து போகட்டும் உலகம்

 

எரிந்து போங்கள் அதில் நீங்கள்
உங்கள் ஊனுருகிப் பிறக்கும்
முள்ளந்தண்டுகளில் நிமிரட்டும்
எங்கள் குலம்
உங்கள் எலும்புகளில் செய்யுங்கள்
குழந்தைகளுக்கான ஆயுதங்களை
சாம்பல் தட்டி மீண்டும்
எழுந்து பறவுங்கள் “பீனிக்ஸ்” களாக
மறைத்துப் போங்கள்
இந்த உலகத்தின் சூரியனை

 

மிஞ்சும் பிளம்புகளை உங்கள்
பிஞ்சுகள் சுமக்கட்டும்
உங்களை எரித்த கொள்ளிகளில்
உதிர்க்கட்டும் அவர்களின் சூரியன்
அதில் சிவந்து சிறக்கட்டும்
எம் ஈழ தேசம்

 
எழுந்து வாருங்கள்
என் வீரத் தமிழர்களே
நாம் மரணிப்பதற்கு முன்னும் பின்னும்
செய்யவேண்டியவை கோடி


அம்மா

Author: நதியானவள், October 5, 2009
October 5, 2009

கர்ப்பம் தந்த அதே கதகதப்பை

இப்போதும் பொழிகின்றன
உன் பேரன்புச் சிறகுகள்
நித்தமும் பிரவாகமெடுக்கும்
உன் கருணைச் சுழிக்குத்தான்
எத்துணை ஆழம்
 
 
அட்சய பாத்திரங்கள் அத்தனையும்
கையிலே வைத்திருக்கிறாய்
போதாதற்கு உன் புன்னகை வேறு
 
 
பருவ காலங்கள் அத்தனையும்
உன்னைக் கேட்டே வருகின்றன
நீயே காவலுக்கிருப்பதால்
 
 
எதற்கும் யோசிப்பதா
கணமும் கவலைப்படுவதா
எனக்காக அதையும் நீயே செய்கிறாய்
என் வலிகள் உனதாக்கி
சுகங்கள் மட்டுமே எனதாக்கி வாழ
உன்னால் மட்டுமே முடிகிறது
அம்மா
கோடி வார்த்தைகளை
என் தமிழ் தந்திடினும்
திணறித் தான் போனேன்
உன்னைக் கவிதையாய் வடிக்க
முடிவில்லாது நீளும்
உன் பேரன்பு போலவே
முடிக்க முடியாது நீள்கின்றன
உன்னைப் பற்றிய என் கவிதைகள்

சாத்தியக் கூறுகள்

Author: நதியானவள், October 4, 2009
October 4, 2009

நான் பெய்யெனப் பெய்யும்
என் முகில்களிலிருந்து
வழிந்து இறங்கியது காதல்
 
 
நிரம்பிப் போன
என் கவிதைக் குளங்கள்
பெருக்கெடுத்துக் கொண்டேயிருந்தன
 
 
நானும் நீயுமாகிய இரு
மடுக்களிடைப் பிளந்து
வழிந்து பாயத்தொடங்கின
 
 
எல்லாம் சேர்ந்து நதியாகியபின்
கரை மருவித் தேடலுடன்
அலைந்து கொண்டேயிருந்தன
 
 
பின்னொரு நாளில் அவை
பகர்ந்த போதுதான் தெரிந்ததது
உன்னைத் தேடுகின்றன என்று
 
 
நதி திரும்பி மேலேற
ஏதேனும் சாத்தியக்கூறுகள்?

அந்த அரை நொடிக் கனவு

Author: நதியானவள், October 4, 2009
October 4, 2009

குழம்பிய கனவுகளுடன்

தூங்கவே முடியவில்லை
ஆயிரம் தடவைகள் விழித்தாலும்
தூக்கமும் விடவேயில்லை
 
 
வலிக்கும் கண்ணிமைகளிலே
வந்தமர்ந்த மீதிக் கனவுகளை
நாளையிரவுக்கென்றே
சேமிக்க முடிகிறது
 
 
பாதி கனவொன்றுக்குள்
அயர்ந்த போது தான்
அரை நொடிக்குத் தெரிந்தது
உன் முகம்
 
 
விட்டு விட்டு வந்து போகும்
கலங்கிய கனவுகளுக்குள்
எப்படித் தேடுவேன்
அந்தக் கனவை
 
 
சரி கனவு கனவாகவே இருக்கட்டும்
நான் அயர்ந்து தூங்கவே விரும்புகின்றேன்

தேவதையின் சிறகுகள்

Author: நதியானவள், October 3, 2009
October 3, 2009

என் பூக்களில் தரையிறங்கிய
அத்தனை தேவதைகளும்
மெலிதாகவே அசைத்தனர்
தத்தம் சிறகுகளை

 

 
அசைப்பதேயில்லையென்று
முடிவு செய்திருந்ததாகவும்
என் கவிதை வீசிய தென்றல்
அசைத்துவிட்டதாகவும் விசனமுற்றனர்

 

என் கவிதைகளின் தாலாட்டில்
தாம் தூங்கிவிடலாமென்று
சீக்கிரமாகவே கிளம்பிப்
பறக்க முற்பட்டனர்

 

சற்று நில்லுங்கள் என்று
கேட்டுக் கொண்டேயிருந்தேன்
அவர்களின் பயத்தில் நியாயமிருப்பதாக
எனக்குப் படவேயில்லை

 

ஆயிரம் வரங்கள் கேட்கும்
ஆயத்தத்தில் இருந்த என் மனதோ
துவண்டே போனது
கடைசித் தேவதையை மறித்தது

 

எல்லாம் தந்து போக
என் கவிதை கேட்ட தேவதை
நீண்ட நேரம் நின்று
பார்த்துக் கொண்டேயிருந்தது

 

விரல் வழிந்த என் உயிரோ
பற்றியது என் கவிதையை
நிமிர்ந்து பார்த்தது தேவதையை
தன் மௌனம் கலைத்தது

 

“நான் தொலையத் தொலைய
உயிர்ப்பிக்கும் என் கவிதை தவிர
வேறெதுவும்” தேவையேயில்லை”

 

பறந்த தேவதையைக்
காணவேயில்லை
உதிர்ந்த சிறு சிறகில்
என் கவி வரிகள்