Archive for September, 2009


வா….பிரிவோம்…போ

Author: நதியானவள், September 24, 2009
September 24, 2009

காதலும் நட்பும்
சந்திக்கும் புள்ளியில்
சமாந்திரங் கீறியது
மனது

 

அரிதாரங்கள் அப்பி
மறைத்துப் போகலாந்தான்
வழியும் குருதியில்
கோடு கரையுமே?

 

இதற்குத்தான்
எதிரெதிர்க் கோணங்களைக்
கணக்குப் பார்க்காதே என்றேன் நான்
எப்போதும் சமனாக இருக்காது
அது கீறுவதைப் பொறுத்து

 

விதிவிலக்குகளும் உண்டு
காமம் கலக்காத காதல்
காதல் கலக்காத நட்பு
முடியாதில்லையா?

 

என் மனதிற்கு வெள்ளையடிக்கும்
செலவை நீ ஏற்றுக் கொள்ளாதே
அதற்கு முன் எத்தனையோ
கிறுக்கல்களை அழிக்க
உன் ஆயுள் செலவிடவேண்டும்

 

அதனால் தான் சொல்கின்றேன்
சமாந்திரங்கள் சேர்வதில்லை
இறைக் கிறுக்கல்கள் அழிவதில்லை

 

வா
பிரிவோம்
போ

 

நட்பு அதிலேயே கிடக்கட்டும்
திரும்பினால் தொடர்வோம்


நீ சூரியன், மின்மினி என் காதல்……

Author: நதியானவள், September 24, 2009
September 24, 2009

படபடத்த மனத்தையும்
பளீரிட்ட காதலையும்
மறைத்துக் கொண்டிருந்தேன்
மின்மினிகளின் ஒளியில்
அவை வைரங்களாக ஒளிர்வதாக
என்னுடனே வாதாடிக் கொண்டுமிருந்தேன்
பகல் வந்தது
என் உலகின் எட்டுத் திக்கிலும்
எழுந்து பரவிய
உன் சூரியக் கீற்றுக்களில்
இறந்தே போயின பூச்சிகள்
இரவும் வந்தது
நீ போகவேண்டுமென்று அடமே பிடித்தாய்
போய் வா என்று அனுப்பிய பின்
அப்படியே கிடக்கின்றன
காதலும் மனமும்
இப்போது மின்மினியும் இல்லாது..


முப்புரம் எரித்தவனே
முக்கண் விநாயகனே
மூத்தவனைக் கோபித்த
எந்தன் கடம்பனே
சிவனின் பாதியே
சின மிகு காளியே
கோவில் காத்து நிற்கும்
வைரவேனே, மாடனே
முக்கோடி தேவர்களே
முனிகளே பரிவாரங்களே

 

வாருங்கள் எந்தன்
வழக்காடு மன்றுக்கு
நில்லுங்கள் அங்கே
எனக்கொரு வழக்குண்டு

 

பாலும் பசுநெய்யும்
பழமும் பன்னீரும்
பட்டுங் குஞ்சரமும்
பறித்தெடுத்த புதுப் பூவும்
கொட்டும் விபூதியும்
குளிர்க்க வைக்கும் அபிசேகமும்
நாவினிக்கும் தமிழ்ப் பாவும்
நாழிக்கொரு பூசையுமாய்
உங்களுக்கு நாங்கள்
என்னதான் குறை வைத்தோம்?

 

சம்பந்தன் பாக் கொண்ட
கேதீச்சரத்தானே
பேடுடன் விடையேறி
பேருலா நீ வந்த வீதியெல்லாம்
எருதுடன் எமை வெட்டுகையில்
நெற்றிக் கண் திறந்து
நெடுமென நின்ற ஈசா
முப்புரம் எரித்த தீயில்
மூன்று பொறி கிடைக்கலையா?

 

பசிகொண்ட சம்பந்தன்
இசைகூட்டி அழுத போது
ஞானப் பால் கொண்டு
விடையேறி வந்தவளே
பிஞ்சு நடை பயிலா வீட்டில்
பிச்சை மறுத்த சிவனே
பசி கொண்ட என் குழந்தை
செத்த தாய் மடி உறிஞ்சிய போது
வானுக்கும் மண்ணுக்குமாய்
ஏன் உங்கள் பசு பறக்கவில்லை?

 

நாலு வீதியில் பந்தலிட்டு
நாம் தேர் இழுத்த பாதைகளில்
நாயாய் என் சனம்
நாதியற்றுச் சாகையிலே
நல்லூர்க் கந்தா
எந்தப் படை வீட்டில் நீ
எத்துணைவி துணையிருந்தாய்?

 
கற்பூரச் சட்டியிலே தான்
காணிக்கையாக எரிந்த மகள்
கற்புக்காய் எரிகையிலே
கற்பூர நாயகியே கனகவல்லி
எங்கு போனாய்?

 

நயினையின் தேவியளே
தெல்லிப்பளை துர்காவே
வற்றாப்பளை குடிகொண்ட
மார்பு திருகி மதுரை எரித்தவளே
என் தேசம் அழிகையிலே
எங்கேயம்மா உங்கள் சூலங்கள்?

 

பாய் விரித்து மடை கொட்டி
பால் நிலவில் உனைப் பணிந்து
கோவில் காப்பது போல் எம்
கோட்டை காக்கக் கேட்டோமே
கோப வைரவனே
நீயுமேன் வரவில்லை?

 

ஐயோ ஐயோ என்று
அலறித் துடித்தோமே
எரியுதே என் தேசம்
ஈசா வா என்றோமே
படைத்தவன் படி அளப்பான் என்று
பட்டினியில் செத்தோமே
எங்கு போனீர்கள்
ஏன் ஒருவருமே வரவில்லை?

 

என் தாய் எனக்குத் தந்த
பாலின் மேல் உரிமை இருந்தால்
அவளூட்டி வளர்த்து விட்ட
என் தமிழ் மேல் உரிமை இருந்தால்
சைவத்தையும் தமிழையும்
கண்களாக்க உரிமை இருந்தால்

 

அந்தக் குருதி மேல் ஆணையிட்டு
என் தமிழின் மேல் ஆணையிட்டு
முக்கண்ணா நீ படைத்த
மூவுலகின் மேல் ஆணையிட்டு
அழைக்கிறேன் உங்களை;

 

வாருங்கள் கடவுள்களே
நில்லுங்கள் அங்கே
எனக்கும் உங்களுக்கும்
நீண்டதொரு வழக்குண்டு


என் தேசத்தின் தேவியே….

Author: நதியானவள், September 21, 2009
September 21, 2009

புல்லரிப்பதோடு நிறுத்திக் கொள்கின்றன
என் கைகள்
பல வேளைகளில் கோஷம் போடவும்
ஏன் சில வேளைகளில்
உன்னைப் பற்றிக் கவிதை கிறுக்கவும்

 

தலைப்புக்களில் தலையின்றிக் கிடக்கும்
தமிழினத்தைப் பார்த்து
முதல் பந்தி தாண்ட மறுக்கின்றன
என் விழிகள் அதிலேயே செத்து
கண்ணிமைக் கல்லறைகளைத்
தாமாகவே மூடுகின்றன

 

ஐயோ கடவுளே என்று
கதறுவதோடு நிற்கிறது
என் மனம்
இதயச் சவப்பெட்டிக்குள் இருப்பதால்
மெலிதாகவே கேட்கின்றன
அதன் முனகல்கள்

 

விதைத்த மனிதர்களின் தோட்டத்திலேயே
நடக்க மறுக்கும்
என் கால்கள்
மயானமான என் தேசத்தில்
எப்படிப் பதியும்
இப்போதே உதிர்கின்றன
என் விரல்கள் ஒவ்வொன்றாய்

 

புலம் பெயர்ந்து தொலைந்து
புதைந்தே போனது வாழ்க்கை
விட்டுப் பறந்த உயிரும்
அழுகிப் போன உடலும்
மரணித்துக் கிடக்கின்றேன் நான்

 

என் முகவரி தந்த
என் ஈழ தேசமே
உன் எரியும் நெருப்பில்
என் சிதைக்குக் கொஞ்சம்
கொள்ளி கிடைக்காது போயிற்றே
என் சாம்பல் தூவ
உன் நதிகள் ஒன்றிலிருந்தும்
உத்தரவு கிடைக்காது போயிற்றே

 

என் தேசத்தின் தேவியே
அந்நியப் பனியில்
அஸ்தியைக் கரைக்கும்
ஆசி வாங்கி வந்தவளம்மா
நான்
அதனால் தான்
உன் எல்லை தாண்டுகையிலேயே
செத்து விட்டு வந்தேன்

 

என் தாயே
உன்னுடன் உதிர்க்கட்டும்
என் உணர்வுகள்
நீ எரிக்கையில்
எரிக்கப் படட்டும் என் சாபங்கள்

 

அதுவரை பிசாசாய்த் தானும்
என்னுயிர் உன் மடி தேடி வந்தால்
இருக்க விடம்மா
உன் புளிய மரத்தில்
நீ பெற்றவள்
இது கூடவா செய்ய மாட்டாய்


ஏகாந்தம்!

Author: நதியானவள், September 19, 2009
September 19, 2009

வானத்துக்கும் பூமிக்குமாய்ப் பனிப் புகார் முகாமிட்டிருந்த போது தான்
தொங்கு பாலத்தடியில்
தொங்கிக் கொண்டிருந்த

என் ஏகாந்தத்தைக் கண்டு பிடித்தேன்
கழுகுகளின் இறகுகள்
கழிக்கப் பட்டுக் கிடந்தனவாயினும்
காயங்கள் தடவ
அவற்றைத்தான் உபயோகிக்க முடிந்தது.
எப்போதும் போல் ஊமையாக
தன்னிலை மறந்து கிடந்ததை
குணப்படுத்தவே முடியவில்லை
கஷாயங்கள் கசப்பாகவிருந்ததை விட
அவை தந்த அதிர்வுகளில் அழிந்தது
கரைத்து ஊற்றினேன்
என் கவிதையை
எழுந்து பறந்ததை
இன்னும் காணவில்லை
இனி எந்தக் கழுகோ?
அது எதனடியிலோ?
காத்திருக்கிறேன்
கவிதையுடன்

வியாபிப்பு!

Author: நதியானவள், September 13, 2009
September 13, 2009

துளிர்த்த தளிரில்
குமிழ்த்த நீராய் என்னுள் நீ!
நான் சிறுத்து புள்ளியான பின்
உடைந்து பரவினாய்;
உன்னுள்ளே நானானேன்;
நான்!

எத்தனையாவது!

Author: நதியானவள், September 13, 2009
September 13, 2009

கரையொதுங்கிக் கொண்டிருந்தன
கிளிஞ்சல்கள்;
ஏதேச்சையாக எடுத்ததில்
எழுதப்பட்டிருந்தது;
கடல் கரைக்குத் தந்த
இத்தனையாவது முத்தம் என்று!

ஊருணி!…

Author: நதியானவள், September 13, 2009
September 13, 2009

அள்ள அள்ள
ஊறிக் கொண்டேயிருக்கிறது
என் மனம்;
உன் நினைவுகளில்!
ஊ(ற்று)ர்க் கிணறு போல!

மீந்த என் நொடிகள்!

Author: நதியானவள், September 9, 2009
September 9, 2009

காதலுக்கான காத்திருப்பில்
மரணித்த நொடிகளின்
கடைசி ஆசைகளைக் கூட
நிவர்த்திக்க முடியவில்லை என்னால்;

 

மரண பயத்தில் அவை
மண்டியிட்ட போதும்
காதலின் சிலுவையில்
ஆணிகளாகின்றன என்று
பெருமை பிசத்திக் கொண்டேயிருந்தேன்!

 

குறுக்கும் நெடுக்குமாய்
அவற்றுக்கான கல்லறைகள்
அடுக்கப் பட்ட போதும்
அசையவில்லை நான்;

 

பூக்களைப் பிடுங்கும் போதான
வலிகள் தாங்க முடியாததால்
அவற்றுக்கான மாலைகளை
என் கண்ணீராலேயே செய்தேன்;

 

மார்கழி பெய்த மழையில்
மாய்ந்து மாய்ந்து நனைந்தும்
கரைக்க முடியவில்லை
அவை தந்து போன சாபங்களை!

 

ஏங்கிச் செத்தவற்றை
அடக்கம் செய்யத்
தோண்டித் தோண்டி
சிதைந்தே போனது என் பூமி!

 

சில நொடிகள் பாவம்;
என்னைப் புரிந்ததால்
தாமாகவே தற்கொலையில்
உயிரை விட்டன!

 

முகாரிகளில் ஒப்பாரியிட
முடியாது போனதால்
மனதுக்குள்ளேயே ஓதினேன்;
அஞ்சலியையும்; தனிமையையும்;

 

காத்திருப்பதில்லை என்று
உயிரும் நானும்
சாசனம் எழுதிய பின் தான்
நீ வந்தாய்!

 
என் நொடிகள் மீண்டும்
கொலை செய்யப் படலாயின;
உன்னால்!

 

மன்னித்து விடு காதலே;
இறந்த நொடிகள் போக
மீந்தவற்றுக்காகவாவது
வாழ வேண்டும் நான்!
என்றுரைத்த பின்பு
உயிர்க்கத் தொடங்கின
என் நொடிகள்!


என் முதல் பிரசவம்!

Author: நதியானவள், September 7, 2009
September 7, 2009

வலிகள் கூடி மரத்துப் போய்
மருண்டது அழுதபோது
ஒரு தாயாகி எனக்கதை
கர்ப்பம் சுமக்க மட்டுமே முடிந்தது!

 

முந்நூறு நாட்கள் தாண்டி
முக்கோடி நாழிகள் நீண்ட பின்பும்
பிரசவிக்க முடியாது
பிதற்றிக் கொண்டேயிருந்தேன் நான்!

 

கடல் கொண்ட பிடி மணலாய்
இப் பிரபஞ்சம் என்னை முளுங்கியபோது
கற்போடு இருப்பதிலும் – என்
கர்ப்பங் காப்பதிலேயே தொலைந்தேன்!

 

உறவுகளும்; பிரிவுகளும்;
உயிர் வழியும் உயிர் வலியும்
நீட்டிக் கொண்டேயிருந்தன
என் கர்ப்ப காலத்தை!

 

பொய்மைகள்; கயமைகள்;
துரோகங்கள்; தோல்விகள்;
என் மனவிலாசத்துக்கு
தினமும் அஞ்சலிடப்பட்டன!

 

ஆனால்; நரிகள் கூடிப் போன
நடுக் காட்டு வழி நடந்த போதும்
முகமறியாக் கருவை முத்தமிட
காதலை மட்டுமே அனுமதித்தேன்!

 

என் நிழலும் கவியெழுதும்
என்றான பின்பு
என் நிலவும் பொழிந்தது
எண்ணில்லாச் சூரியன்களை!

 

உச்சியிலே உருவாகி
பச்சையிலே உயிராகி
இச்சையிலே திசையேகி
கடலேகும் நதியான பின்பு;

 

நேற்றுத் தான் பெற்றெடுத்தேன்;
என் மனதை!

 

சார்ந்த கரை தேடி
சேர்ந்த கறை கழுவி
ஊர்ந்து போகும் நதியான பின்பு
உயிர் முடக்கும்
தீக் கர்ப்பம்தான் எதற்கு!

 

என் மனம்;
இந்த நதியின் குழந்தை!