Archive for December, 2008


என் பூமியில் ஏதேதோ

Author: நதியானவள், December 31, 2008
December 31, 2008

ஆடி அசைந்து வந்த
ஆழி சூழ் என் பூமி
ஆதாரமிழந்து ஆடுகிறது
அதன் விசையில்!

என் வானத்து விண்மீன்கள்
துள்ளிக் குதிக்கின்றன;
நீ ஏதாவது தூதனுப்பினாயா?

என் வரையின் எல்லைக் கோடுகள்
வான்மதியால் நீளமாக்கப் படுகின்றன;
உன் முணுமுணுப்புக்கள் அதன் காதில்
விழுந்துவிட்டதோ?

நீல வண்ண வானமதின்
நீங்கா வெப்பமும் ஒளியும்
நீ பார்த்த பார்வையில்
நீராகிவிட்டது போலும்!
என் பூமி பகலில் இருட்டி விடுகிறது!

என் தோட்டப் பூக்கள் எல்லாம்
உன் பெயர் சொன்னவுடன் பூக்கின்றன!
ஏன் உன் தோட்ட வண்டுகளையா
உத்தரவிட்டு அனுப்புகிறாய்?

என் புல்வெளியில் பனித்துளிகள்
எல்லை அற்று நீள்கின்றன
ஏன் என்கிறாயா?
பகலில் தான் சூரியன் பஸ்பமாகி விடுகிறதே!
அதனால் தான் சொல்லுகிறேன்;

உன்னால் பறிபோயாகிவிட்டது
என் பூமியின் உத்தமிப் பட்டம்;
என் பூமியில் ஏதேதோ
உன்னைச் சார்ந்து!


உனக்கு அடி பட்டு விட்டால்

Author: நதியானவள், December 28, 2008
December 28, 2008

கண்ணிமைகளை அகற்ற வேண்டும்

மூடி மூடித் திறக்கின்றேன்
பயமாக இருக்கிறது அதனால்
தற்சமயம் உனக்கு அடி பட்டுவிட்டால்

என்னைக் காணவில்லை!

Author: நதியானவள், December 28, 2008
December 28, 2008

நதிகளில் நனைந்து எழுந்து
நடைகளிலே லயம் தொலைத்து
பாதங்கள் புண்ணாகிப்
பாவி உயிர் போகையிலே
பதைத்தெலும்பிக் காயவைத்து
நடைகளின் லயம் தேடிப் பின் – என்
பாதச் சுவடு தேடுகின்றேன்
கண்டவர்கள் யாருமுண்டோ? – என்னைத்
தெரிந்தவர்கள் எவருமுண்டோ?


நாளை ஒரு ஞாயிறே!

Author: நதியானவள், December 27, 2008
December 27, 2008

நாளொன்று எவ்வளவு கடமை மிக்கது
தாமதமில்லாமல் அழகாகவே விடிகிறது!
அது ஒரு வாரஇறுதி;
என் எதிர்பார்ப்பு மிகுந்த சனிப் பொழுது;
வீணை வகுப்புமுடிந்து
விரலில் அடையாளத்துடன் வருகிறேன் நான்,
புதிதாக அறிமுகமான நண்பனுடன் நீ!
நண்பியுடன் சேர்ந்து நகர்ந்து
நளினமாக உட்காரும் அவளுடன்
ஒதுங்கி இருக்கிறேன் நான்;
என் பார்வை புலவட்டத்துக்குள்
அகப்படுகிறது உன் உருவம்!

ஆசிரியையைக் காணவில்லை!
நான் பயந்து போனேன்!
வகுப்பு முழுவதும் சிரிப்பொலிகள்;
என் இதயம் அழத்தொடங்கியது!
திடீரென்று பரவியதோர் நிசப்தம்;
எல்லோரும் டீச்செரைப் பார்க்க
நாமோ நம்மைப் பார்த்த வண்ணம்!
வகுப்பு உள்ளதென்ற நிம்மதியிலும்
உன் பார்வை தந்த பூரிப்புடனும்
என் இதயம் புன்னகைக்கத் தொடங்கியது!


கரும்பலகையை அழிக்க ஆரம்பித்தார் அவர்;
கலைந்து பறந்தன இலங்கையின் ஆறுகளும் குளங்களும்!
ஐவரானோம்என வாசிக்க ஆரம்பித்தார் அவர்நாம்
இருவரானோம்என யோசிக்க ஆரம்பித்தோம்!
உனக்கடுத்த பாடல் எனக்கு முறை ஆனபோது
உள்ளே பறந்தன பட்டாம்பூச்சிகள்!
உன் முக பாவங்களைப் பார்த்த வண்ணமே
என் முக பாவங்கள் மாறத் தொடங்கின,


ஆசிரியை கிளம்பத் தயாரானார்!
அடிவயிற்றில் கலைந்தன பட்டாம்பூச்சிகள்!
நான் நம்பிக்கை இழைக்கவில்லை!
இதுவோ வார இறுதி;
நாளையோ ஞாயிறு!!!!