Archive for the 'நதியாகிய நான்' Category
சிந்தாமல் விட்ட துளி
Author: நதியானவள், December 2, 2009கண் ஓட்டைகளுக்குள்
இவ்வளவு குருதியிருக்குமென்று
நான் நினைதேயிருக்கவில்லை
அது உதடு நனைக்கும் போதான
உவர்ப்பை என்னால்
எப்போதுமே ரசிக்க முடிவதில்லை
என் நெஞ்சு சாற்றை உறிஞ்சி
எப்போதாவது வழியும் துளி
இனிக்கவும் செய்கிறது
பலவேளைகளில்
தாடை இறுக்கி
காற்றின் மூச்சு நிறுத்தி
விசும்பலின் கழுத்துத் திருகி
விக்கலில் முடிக்கையில்
நறுக்கென்ற ஒரு வலியுடன்
தன்னிருப்பை சொல்லி
துளியை உள்வாங்குகிறது
இதயம்
கூர்ப்பின் பரிணாமத்தில்
இன்னொன்றாக மாறி
என்னை ஆளத் தொடங்குகிறது
நான் சிந்தாமல் விட்ட அந்த
செங்குருதித் துளி
கண்ணில்லாக் கண்ணாடி
Author: நதியானவள், November 29, 2009என் கண்ணாடிக்கு
கண்கள் முளைத்திருந்ததை
இன்று அதிகாலைதான் பார்த்தேன்
நான் எதிர்பார்த்ததை விட
அகோரமாக இருந்தது
நான் அழகாகத் தெரிந்தேன்
ஆனால் அதன் கோர விழிகள்
என்னை நிராகரித்து
எனக்குள் இறங்கின
கண்ணாடியின் நீள் கரங்கள்
என்னுடல் கிழித்து
உள்ளே பதிந்து
நார் நாராய் நார் நாராய்
இழுத்துக் கொண்டே இருந்தன
இது என்ன
எதன்மேலான ஆசை இது
மேலும் என்னென்ன
காயங்கள்
வலிகள்
கலைந்த கவிக்கருக்கள்
இன்றிரவுக்கான கனவு
நாளைக்கான பயம்
அடுத்த நொடிக்கான பொய்
இன்னொன்றிலான பொறாமை
ஏன் நேற்று, முந்தய நாள்,
முதல்மாதம் அதற்கு
முந்திய வருடக் காதல்கள்
துரோக நட்பு
அப்பப்பா ஆயிரம் ஆயிரம்
கழிவுச் சாக்கடைக்குள்
அமிழ்ந்த ஒரு ஊரின்
பிணக்குவியல் போல
கணக்கற்று கணக்கற்று
பொல பொலவென உதிர்ந்த
புற உடம்பை அள்ளி
பொட்டலங் கட்டிஎடுத்து
என் முன்னே கடை பரப்பியது
கண்ணாடி
ஒரு தலைச் சிலுப்பலில்
மீண்டும் வளர்ந்தது உடல்
சாக்கடைப் பிணங்களை
மீண்டும் தின்று கொண்டே
கண்ணாடி பார்த்தது
நான் மிக அழகாகத் தெரிந்தேன்
கண்களிருக்கவில்லை
அதற்கு
இப்போது எனக்கும்
நினைவு வன்புணர்ச்சி
Author: நதியானவள், November 28, 2009அகோர நினைவுகளைப் பிரசவித்த
அசிங்கத் தழும்புகள் பல
என் வயிறெங்கும்
நான் மார்பு கிழித்தெறிந்த
அவற்றின் எச்சங்கள் பல
என் வழியெங்கும்
முண்டங்களெல்லாம் சேர்ந்து
முடிவிலியில் சந்திக்கின்றன
பிறிதொரு நாளில் எனை
இம்சிப்பது பற்றியும்
இன்னொரு மன வன்புனர்வுக்கான
இரகசிய ஆயத்தம் பற்றியும்
சூடாகவே விவாதிக்கின்றன
பிண நாற்றங்களிடையில் திமிறி
தன் மூச்சையே தேடும் உயிர்
வெற்று நெஞ்சுக் கூட்டில்
காதல் இருப்பதாகப் பிதற்றுகிறது
அது கனவில் இருக்கிறது
எதிர்பாராத கணத்தில் நடக்கும்
நினைவு வன்புணர்ச்சிகளில்
களைத்துக் கிடக்கிறது மனம்
காதல் பற்றிக் கதைக்க
அவற்றின் வாய் தேடுகிறது
எனினும் நீளும் வலிகளின் போது
முண்டங்களே பிரசவமாகின்றன
அவை முடிவிலியிலேயே தான்
சந்திக்கவும் செய்கின்றன
தேவதையின் சிறகுகள்
Author: நதியானவள், October 3, 2009
நிமிர்ந்து பார்த்தது தேவதையை
நானுமின்றி யாருமில்லை!……….
Author: நதியானவள், October 3, 2009எதையுமே பதிவதில்லை
என் தினப் பதிவேட்டில்;
எதுவுமே நினைவிலில்லை
என் மனவேட்டில்;
கனவுகள் காண்பதில்லை
கண்கள் நனவேட்டில்;
கண்மணிகள் நனைவதில்லை
கண்ணீர் சுனை வீட்டில்;
தேவதைகள் அழுவதில்லை
தேவனின் கணக்கில்;
தெளிந்த நதி நிற்பதில்லை
தேடும் பயணத்தில்;
நாளை என்றதில்லை
நான் நடக்கும் பருவத்தில்;
நடக்கும் நொடி தவிரவில்லை
நான் கடக்கும் பயணத்தில்;
காதலில்லை காயமில்லை
எந்தன் உலகத்தில்;
சாதலில்லை உயிர்ப்புமில்லை
எந்தன் ஆட்சியில்;
வாழ்ந்து போக நானுமில்லை
என் உயிர் தவிர;
ஆள்ந்து போக எவருமில்லை
என் யாக்கை தவிர;
ஏகாந்தம்!
Author: நதியானவள், September 19, 2009வானத்துக்கும் பூமிக்குமாய்ப் பனிப் புகார் முகாமிட்டிருந்த போது தான்
தொங்கு பாலத்தடியில்
தொங்கிக் கொண்டிருந்த
என் முதல் பிரசவம்!
Author: நதியானவள், September 7, 2009வலிகள் கூடி மரத்துப் போய்
மருண்டது அழுதபோது
ஒரு தாயாகி எனக்கதை
கர்ப்பம் சுமக்க மட்டுமே முடிந்தது!
முந்நூறு நாட்கள் தாண்டி
முக்கோடி நாழிகள் நீண்ட பின்பும்
பிரசவிக்க முடியாது
பிதற்றிக் கொண்டேயிருந்தேன் நான்!
கடல் கொண்ட பிடி மணலாய்
இப் பிரபஞ்சம் என்னை முளுங்கியபோது
கற்போடு இருப்பதிலும் – என்
கர்ப்பங் காப்பதிலேயே தொலைந்தேன்!
உறவுகளும்; பிரிவுகளும்;
உயிர் வழியும் உயிர் வலியும்
நீட்டிக் கொண்டேயிருந்தன
என் கர்ப்ப காலத்தை!
பொய்மைகள்; கயமைகள்;
துரோகங்கள்; தோல்விகள்;
என் மனவிலாசத்துக்கு
தினமும் அஞ்சலிடப்பட்டன!
ஆனால்; நரிகள் கூடிப் போன
நடுக் காட்டு வழி நடந்த போதும்
முகமறியாக் கருவை முத்தமிட
காதலை மட்டுமே அனுமதித்தேன்!
என் நிழலும் கவியெழுதும்
என்றான பின்பு
என் நிலவும் பொழிந்தது
எண்ணில்லாச் சூரியன்களை!
உச்சியிலே உருவாகி
பச்சையிலே உயிராகி
இச்சையிலே திசையேகி
கடலேகும் நதியான பின்பு;
நேற்றுத் தான் பெற்றெடுத்தேன்;
என் மனதை!
சார்ந்த கரை தேடி
சேர்ந்த கறை கழுவி
ஊர்ந்து போகும் நதியான பின்பு
உயிர் முடக்கும்
தீக் கர்ப்பம்தான் எதற்கு!
என் மனம்;
இந்த நதியின் குழந்தை!
தனிமை தேடி!
Author: நதியானவள், August 20, 2009வலிகளும் கவி கூறும்
வழிகளும் வந்த பின்பு
உக்கி உதிர்ந்து போகின்றன
என் உணர்வுகள்!
ஏகாந்தம் படர்ந்து – எனை
ஏப்பம் விடத் துணிந்த பின்பு
ஏங்கத் தொடங்கியிருக்கிறது மனது;
எதுவுமில்லாத் தனிமைக்காக!
கலங்கிய குளம் காட்டும்
குழம்பிய விம்பங்கள் போல
விளங்காமல் இருக்கின்றன
விசித்திரமான பல உறவுகள்!
கனவுகளில் கண் மயங்கி – அது
கலைகையில் உயிர் உருகி
நனவுகளில் மனமளுகித் தினம்
நடந்து போகின்றேன் என் மீது நானே!
கண்ணீர் உப்புச் சுரந்து
கன்னத்தில் கோலமிட்ட போதும்
துடைக்கவும் நாதியற்றேன்;
தூக்கில் தொங்கிப் போன என் உணர்ச்சிகளால்!
என் கை நானே கோர்த்து
எதிர் நீச்சலிட்டுத் தாங்கி
நானாக நடக்கையிலே – என்
தனிமையை ஏன் வதைக்கிறீர்கள்?
வலிக்கிறது என்றாலும்
வலி தரும் உலகமிது
அழுகின்றேன் எனக்குள்ளே;
என்னுயிரே ஊமையாக!
ஆக;
மனமேங்கும் தனிமை தேடி
சூழ்ந்த இருள் தனைக் கொளுத்திப்
பயணிக்க வேண்டும் நான்!
வலி எழுதும் கவிதைகள் – என்
வாசல் வந்து சேரும் முன்னர்
மனமேங்கும் தனிமை தேடி
பயணிக்க வேண்டும் நான்!
நான் தனியே!
Author: நதியானவள், August 8, 2009கவிந்து கிடக்கிறது இருள்;
வானம் மனம் விட்டு – கணத்தில்
விட்டு விட்டு அழுத மாலையில்
மழையில் நனைந்து தனியே நடக்கின்றேன் நான்.
விரிந்து கிடக்கிறது சாலை;
என் பாத ஒலியே தேய்ந்து – எனக்கு
எட்டு எட்டாய் துணை வரும் பொழுதில்
பயந்து நடக்கின்றேன் நான்.
கலைந்து களைத்துக் கிடக்கும் உயிரும் – கூட
அலைந்து சோர்ந்து நிற்கும் மனமும் – சோகம்
நினைந்து உறங்கிப் போக – மழை
நனைந்த சாலை தனியே நடக்கின்றேன் நான்.
இலக்கற்ற வாழ்க்கை கைக் கொண்டு
பளுவற்ற பூமிக்கும் சிரமம் என்று
கழுவேற்றத் துடிக்கும் வெறுமையுடன் – மழை
கழுவிப் போன சாலை நடகின்றேன் நான்.
கனவுகள் நீளும் விழிகள் கலங்க
எனதென்ற உறவு இல்லா வெளியில்
நனவுகள் தேடி தினமும் – வான
மழை கழுவிய சாலை நடக்கின்றேன் நான்.
விடிகின்ற ஒவொரு தினமும் – என்
மனம் சாயும் உறவைத் தேடி
கனக்கின்ற உயிர் சுமந்து – நீளும்
சாலை தனியே நடக்கின்றேன் நான்;
கனவுகள் கைகூடும் போது – உன்
தோள் சாய்ந்து கை கோர்த்து – என்
நாள் போகும் என்ற நம்பிக்கையில் – இப்போது
சாலை நடக்கின்றேன் உன் நினைவு துணை கொண்டு.;

