Archive for the 'காதல் போயின்…' Category


தொடரும் காதல்கள்

Author: நதியானவள், October 27, 2009
October 27, 2009

ஊசிக் குளிரில்

உறைந்து கிடக்கிறது
உயிர்
 
என் தெருவெங்கும் பூத்திருக்கும்
பனிப் பூக்களினடியில் கிடக்கிறது
நீ எங்கோ ஏகியதுக்கான
தடங்கள்
தொடரும் கோடைகளில்
கரையும் பனிகளில்
குளங்கள் கட்டி நிற்கிறது
காலம்
 
இறங்கித் தேடவும்
இடமும் தராமல்
கொட்டித் தீர்க்கிறது
தனிமை மழை
 
நான் பிறப்பதற்கு
முன்னோ கூடவோ
நீ பிறந்ததன் அடையாளங்கள்
அதிலே அழிகின்றன

 

 

எங்கோ நீ இருப்பாய்
என்பதான கனவில்
காதல் கொள்கிறது
என் கவிதை
 
 
அதன் வரிகளில் வழியும்
வலிகளில் மீண்டு – மீண்டும்
ஊசிக் குளிரில்
உறையத் தொடங்குகிறது
உயிர்
இன்னொரு கோடை
அதோ
வந்து கொண்டேயிருக்கிறது

உனக்குள்ளே என்றாகட்டும்…..

Author: நதியானவள், October 19, 2009
October 19, 2009

கண்ணுள் பரவிக் கிடக்கும்
குருதிக் குழாய்களினால்
கனவுகள் மட்டுமே
விநியோகிக்கப்படுகின்றன

 

எப்போதாவது கனத்துப் போகும்
என் கண்மடல்களின் வழி
வழிந்து போகின்றன அவை

 

என் காலடிகளிட்கு வெகு அருகில்
காய்ந்து போய்க் கிடக்கின்றன

 

என்னைத் தொடரும் உன்
ஈரப் புன்னகைகளில்
அவை மீள உயிர்ப்பிக்கப் படலாம்
இல்லை உன்னால் தொடரப்படும் பாக்கியம்
என்னால் இழக்கப்படலாம்

 

எது எவ்வாறெனினும்
அவ்வப்போது ஊட்டப்படும்
உன் நினைவுகளில் சிவக்கும் கண்களில்
உதிராமல் இருக்கிறது
உனக்கான என் காதல்

 

நீ பின்தொடரினும்
தொடராது போயினும்
அது வழியாது
உலராது

 

கண் வழிதான் உயிர் பிரியும்
அப்போது தான் காதல் வழியும்
அது உனக்குள் என்றாகட்டுமே


சாத்தியக் கூறுகள்

Author: நதியானவள், October 4, 2009
October 4, 2009

நான் பெய்யெனப் பெய்யும்
என் முகில்களிலிருந்து
வழிந்து இறங்கியது காதல்
 
 
நிரம்பிப் போன
என் கவிதைக் குளங்கள்
பெருக்கெடுத்துக் கொண்டேயிருந்தன
 
 
நானும் நீயுமாகிய இரு
மடுக்களிடைப் பிளந்து
வழிந்து பாயத்தொடங்கின
 
 
எல்லாம் சேர்ந்து நதியாகியபின்
கரை மருவித் தேடலுடன்
அலைந்து கொண்டேயிருந்தன
 
 
பின்னொரு நாளில் அவை
பகர்ந்த போதுதான் தெரிந்ததது
உன்னைத் தேடுகின்றன என்று
 
 
நதி திரும்பி மேலேற
ஏதேனும் சாத்தியக்கூறுகள்?

அந்த அரை நொடிக் கனவு

Author: நதியானவள், October 4, 2009
October 4, 2009

குழம்பிய கனவுகளுடன்

தூங்கவே முடியவில்லை
ஆயிரம் தடவைகள் விழித்தாலும்
தூக்கமும் விடவேயில்லை
 
 
வலிக்கும் கண்ணிமைகளிலே
வந்தமர்ந்த மீதிக் கனவுகளை
நாளையிரவுக்கென்றே
சேமிக்க முடிகிறது
 
 
பாதி கனவொன்றுக்குள்
அயர்ந்த போது தான்
அரை நொடிக்குத் தெரிந்தது
உன் முகம்
 
 
விட்டு விட்டு வந்து போகும்
கலங்கிய கனவுகளுக்குள்
எப்படித் தேடுவேன்
அந்தக் கனவை
 
 
சரி கனவு கனவாகவே இருக்கட்டும்
நான் அயர்ந்து தூங்கவே விரும்புகின்றேன்

நீ சூரியன், மின்மினி என் காதல்……

Author: நதியானவள், September 24, 2009
September 24, 2009

படபடத்த மனத்தையும்
பளீரிட்ட காதலையும்
மறைத்துக் கொண்டிருந்தேன்
மின்மினிகளின் ஒளியில்
அவை வைரங்களாக ஒளிர்வதாக
என்னுடனே வாதாடிக் கொண்டுமிருந்தேன்
பகல் வந்தது
என் உலகின் எட்டுத் திக்கிலும்
எழுந்து பரவிய
உன் சூரியக் கீற்றுக்களில்
இறந்தே போயின பூச்சிகள்
இரவும் வந்தது
நீ போகவேண்டுமென்று அடமே பிடித்தாய்
போய் வா என்று அனுப்பிய பின்
அப்படியே கிடக்கின்றன
காதலும் மனமும்
இப்போது மின்மினியும் இல்லாது..


மீந்த என் நொடிகள்!

Author: நதியானவள், September 9, 2009
September 9, 2009

காதலுக்கான காத்திருப்பில்
மரணித்த நொடிகளின்
கடைசி ஆசைகளைக் கூட
நிவர்த்திக்க முடியவில்லை என்னால்;

 

மரண பயத்தில் அவை
மண்டியிட்ட போதும்
காதலின் சிலுவையில்
ஆணிகளாகின்றன என்று
பெருமை பிசத்திக் கொண்டேயிருந்தேன்!

 

குறுக்கும் நெடுக்குமாய்
அவற்றுக்கான கல்லறைகள்
அடுக்கப் பட்ட போதும்
அசையவில்லை நான்;

 

பூக்களைப் பிடுங்கும் போதான
வலிகள் தாங்க முடியாததால்
அவற்றுக்கான மாலைகளை
என் கண்ணீராலேயே செய்தேன்;

 

மார்கழி பெய்த மழையில்
மாய்ந்து மாய்ந்து நனைந்தும்
கரைக்க முடியவில்லை
அவை தந்து போன சாபங்களை!

 

ஏங்கிச் செத்தவற்றை
அடக்கம் செய்யத்
தோண்டித் தோண்டி
சிதைந்தே போனது என் பூமி!

 

சில நொடிகள் பாவம்;
என்னைப் புரிந்ததால்
தாமாகவே தற்கொலையில்
உயிரை விட்டன!

 

முகாரிகளில் ஒப்பாரியிட
முடியாது போனதால்
மனதுக்குள்ளேயே ஓதினேன்;
அஞ்சலியையும்; தனிமையையும்;

 

காத்திருப்பதில்லை என்று
உயிரும் நானும்
சாசனம் எழுதிய பின் தான்
நீ வந்தாய்!

 
என் நொடிகள் மீண்டும்
கொலை செய்யப் படலாயின;
உன்னால்!

 

மன்னித்து விடு காதலே;
இறந்த நொடிகள் போக
மீந்தவற்றுக்காகவாவது
வாழ வேண்டும் நான்!
என்றுரைத்த பின்பு
உயிர்க்கத் தொடங்கின
என் நொடிகள்!


காதல் குழந்தை!

Author: நதியானவள், September 4, 2009
September 4, 2009

இரத்தமும் சதையும் வழியக்
குறை மாதத்தில் குற்றுயிராய்ப்
பிரசவித்தபடியே கிடக்கிறது
காதல் குழந்தை!

 

வலிகளில் தாய் வாசங் கண்டு
வாயைச் சப்புக் கொட்டி
உயிரலரக் கத்தியபடி
வழியிலேயே கிடக்கிறது!

 

வழிப் போக்கர்களை நிறுத்தி
தன் பெற்றோர்களைக் கேட்டு
தெரியவில்லை எனும் பதிலில்
தெருவிலேயே தொலைகிறது!

 

நாகரிக நாய்கள் அறியாது நக்கிய
செக்குகளும் சிவலிங்கங்களும்
பொத்திப் பொத்திக் கருக் கொண்டதில்
காதல் தான் குற்றுயிராய்!

 

கர்ப்பத் தடை பெருகினாலும்
காதல் தடை அறியாததில்
வத வதவென்று எங்கும்
முளைத்து நிற்கின்றன காதல் குழந்தைகள்!

 

விளங்காத கனவுகளும் – கொஞ்சம்
விளங்கிப் போன உணர்வுகளும்
புணர்ந்து பெத்துப் போடும்
எல்லாமே காதல் தானா?

 

ஆனால்; என்னதான் செய்ய;
இரத்தமும் சதையும் வழியக்
குறை மாதத்தில் குற்றுயிராய்ப்
பிரசவித்தபடியே கிடக்கிறது
காதல் குழந்தை!


காதல் மட்டும்

Author: நதியானவள், August 26, 2009
August 26, 2009

தொலைந்து போனதா; எது?
என் உலகம்!

 

 

எங்கே போனாய்; நீ?
பேசிக்கொண்டிருந்தேன்;

 

 

அப்போதா; யாருடன்?
என்னுடன்!

 

 

உன்னுடன்; எதைப் பற்றி?
களவு போன என்னுயிர் பற்றி!

 

 

உயிர் இருக்கிறதா? யாரிடம் அது?
இன்னும் தகவல் இல்லை!

 

 

சரி; சூரியன் எங்கே?
தொலைந்து போனதாக நினைவு!

 

 

நிலாவாவது?
அப்படி என்றால்!

 

 

அப்போ எதுதான் இருக்கிறது?
வெறுமை!

 

 

யார் யார் உறவுனக்கு?
எல்லோரும் தொலைந்ததாக கனவு!

 

 

ஐயோ;
எல்லாம் தொலைத்து; நீயும் தொலைந்து;
அப்படி என்னதான் செய்கிறாய் நீ?

 

 

காதல்!…….
காதல் மட்டும்!…


எனக்கென்ன வேண்டும்?

Author: நதியானவள், August 23, 2009
August 23, 2009

வானத்தை வளைக்க வேண்டாம்;
பூமியைப் பிளக்க வேண்டாம்;
காற்றைக் குடிக்க வேண்டாம்;
நெருப்புமேன்? வேண்டவே வேண்டாம்!

 

கொத்துக் கொத்தாய்க் கட்டியிருக்கும்
செத்துப் போன பூக்கள் வேண்டாம்;
வேறொருவர் கனவு பேசும்
உணர்வில்லா மடல்கள் வேண்டாம்!

 

வைரங்கள் வேண்டாம்; – அட
தங்கமே வேண்டாம்;
மழைத்துளி களவெடுத்து
சிப்பி தரும் முத்தும் வேண்டாம்!

 

கண்ணே; மணியே; வேண்டாம்!
எனக்காக சாதலும் வேண்டாம்;
மன மாடங்கள் வேண்டாம்; – எனக்கு
மணி மாடங்களும் வேண்டாம்!

 

உணர்வுகள் ஓங்கிப் போக
உயிரது தேடி ஏங்க
காதல் என்று வரும்போது
அன்பே நான் கேட்பதெல்லாம்;

 

கண் பார்த்து; என் கண்ணுள் பார்த்து;
நின் காதல் உரைக்க வேண்டும்!
அளவில்லா உன் அன்பில் – நான்
அமைதி கண்டு வாழ வேண்டும்!

 

தோற்கிறேன் என்று தோன்றினால்
சாய உன் தோள் வேண்டும்!
சாகின்றேன் எனத் தோன்றும் போது
உயிர் தந்து போக உன் கை வேண்டும்!


எப்படி விளக்குவேன்!

Author: நதியானவள், August 23, 2009
August 23, 2009

அறியாமைக்குள் புதைந்து கிடக்கும் உனக்கு
எப்படி விளக்குவேன் நான்;
என் காதலை!

 

என் காதல் நானுரைத்து
உன் காதலின் கை பிடித்த போது
வானங் கனிந்து துளி சேர்த்து
வாழ்த்துக்கள் அனுப்பியதைச் சொல்லியா?

 

நிலா தன் ஒளி கூட்டி
விண்மீன்கள் சேர்த்துக் கட்டி
உன் மன விலாசமிட்டு
என் மன வாசல் சேர்த்ததை வாசித்தா?

 

மழையில்லா ஒரு பொழுதில்
மேகங்களிடை வானவில் தோன்றி
வர்ணங்களில் கிரீடம் செய்து
என் காதலுக்குப் போட்டதைக் காட்டியா?

 

பூக்கள் மலரும் கணம் பார்த்து
வாசங்கள் பொத்திச் சேர்த்து
தென்றலே நேரில் தந்த – என்
காதல் வாசம் முகரத் தந்தா?

 

பறக்கும் புல்லினங்கலேல்லாம்
பத்து நிமிடம் இடை நிறுத்தி
பூத்துப் போன நம் காதலுக்கு
இசைத்துப் போன பாடலைப் பாடியா?

 

அட விடு!
கண்கள் கதைத்துப் போக – மிகுதியில்
மௌனம் உரைத்துப் போக – விகுதியில்
நம்மிரு உயிர்கள் உயிர்த்துப் போக
காதல் செய்தும் புரியாது;

 

அறியாமைக்குள் புதைந்து கிடக்குமுனக்கு
எப்படி விளக்குவேன் நான்;
என் காதலை!