Archive for the 'சிற்றலைகள்…' Category


நிசப்தமையம்

Author: நதியானவள், March 31, 2010
March 31, 2010

பேசும் நிசப்த
மோனத்தின் மையம்
என் எதிரிருந்தது
 
 
தேநீரின் ஆவியும் 
மூச்சின் சூடும் 
நிறைத்தது போக 
மெதுவாகப் பரந்து
விரிந்து சென்றது

 

மொசைக்கற்களின்
கறுப்புப் புள்ளிகள்
கலைந்து பிரிந்தன
எழும்பிப் பறந்து
காற்றுடன் கதைத்தன

 

 

இறங்க முற்பட்டது
ஓவியத்தில் குழந்தை
அதட்டிய அம்மா
சட்டம் பிரித்து
சாடி ரோஜா பிடுங்கினாள்

 

 

வாக்குவாதப்பட்டுப் பின்
உடன்படிக்கையாயின
அலையத் தொடங்கியது
வெளிச்சம்
முகட்டில் செறிந்தது
இருட்டு

 

 

மூலையில் சிலந்தி
நெய்தலில் இருந்தது
எறும்புகள் இரண்டு
காதலைப் பேசின

 

 

யன்னலின் கம்பிகள்
நகர்ந்ததாகப்பட்டது
தென்றலின் ஸ்பரிசத்தில்
விலகியது சேலை

 

 

கண்ணிமைத்து விட்டிருந்தேன்
நிசப்தத்தின் மையம்
முற்றாகப் பிளந்தது
முதலில் கறுப்புப்புள்ளிகள்
கீழே விழுந்தன
பேசா நிசப்தம்
சூல் கொண்டது என்னை
இன்னொன்றில் பிரசவிக்க


ஒரே தொழில்

Author: நதியானவள், March 27, 2010
March 27, 2010

குழைந்த இருட்டு
குதப்பித் துப்பிய வெட்கங்களைத்
தேடத் தொடங்கினாள்
கழற்றி எறிந்த சட்டையுடன்
ஒட்டியபடி கிடந்தது மனது
கட்டில் சட்டத்தில் தொங்கவிட்ட
உணர்ச்சிகள் வரிசைப்பட்டன

 

 

மல்லிகைகளால் இவனால்
முழமிடப்பட்டிருந்த முத்தங்கள்
இன்னும் மீதமிருந்தன
கனகாம்பரத்துக்காக அங்கே
அவனால் அளக்கப்படும்
யாருக்குத் தெரியும்
நாளை முத்தச் சுரப்புகள்
சேலையுடன் உரியப்படலாம்

 

 

அவளின் உதட்டுச் சாயம் அழித்து
பூவிதழ் தட்டியவனின்
சட்டையின் கட்டங்களிலிருந்து
எம்பிக்கொண்டிருந்தாள் 
அவன் மனைவி
அவளின் சாளரத் தாழ்
கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது

 

 

தலையணை தடவி 
தாள்கள் எண்ணியவளின்
தேயாத சுவடுகள் 
தெருவில் பதிந்தன 
அடையாள வேட்கை
அவளை மட்டும் வேசியாக்கியது

 

 

விடுதலையாகிய மனைவியுடன்
அதே தொழிலிருந்த
அவனைச் சுட்ட
வார்த்தைகள் தேடுவதை விடுத்து
புணர்தலின் அவசரத்தில்
நிர்வாணப்பட்டிருந்தது
இந்த சமூகம்


நிதானித்த பால்யம்

Author: நதியானவள், February 25, 2010
February 25, 2010

பரட்டைத் தலையுடன்
படலைகளில் காய்ந்ததிலும்
எச்சில் மிட்டாய்களுக்காய்
ஏவல்கள் செய்ததிலும்
சட்டையின் பூக்கள் நிறம்
ஒட்டியிருக்கும் ஊஞ்சலிலும்

மண் சோறு தின்ன வந்த
அணில்களும் புலுனிகளும்
தீரத் தீரப் பேசிப் பின்னும்
எஞ்சியிருந்த பொழுதுகளிலும்
மாம்பூக்கள் ஆசிர்வதித்த
மஞ்சள் மாலைகளிலும்

 

 

நிதானமான நிமிடங்களுடன்
நீட்சித்துக் கிடந்தன
பால்யத்தின் நாட்கள்
தெருவின் புழுதிக்குள்
கொலுசின் மணிகளோடு
கழன்றனவாகின கனவுகள்
நான் படிப்பிக்காததால்
தோற்றிருந்தது நித்யகல்யாணி
தேற்றியபடி நாய்க்குட்டி

 

 

பனிகளுக்குள் பூத்திருந்தது
வாடாமல்லி வாசமற்று
ஈச்சம் பழத்தின் நிறம்
மறந்துவிட்டிருந்தது
இன்று காலையில்
நிதானித்தே போயிருந்தன
பால்யத்தின் நாட்கள்


சுதந்திரப்பட்ட ஆறாவது

Author: நதியானவள், February 11, 2010
February 11, 2010

அவன்
“பைத்தியம்”
அவனது ஆறாவது
சுதந்திரப்பட்டது
அவனது உலகத்தை
ஆறாவதுகள் சிருஷ்டித்தன

 

 

நாகரீகம் பேசின
உடைகள்
மொழி பரந்திருந்தது
அர்த்தங்கள் விளங்காததாயும்
அவன் நவீன கவிதைகளை
காற்றில் கிறுக்கினான்
குடித்தான்
மிகுதியை சுவாசித்தான்
ஒற்றைச் செருப்பினடி
ஒதுங்கிக் கிடந்தது
உலகம்

 

 

“சாப்பிட்டாயா” வினவ
என் வாசனைகள் தடுத்தன
ஆடை உள்ளுடம்பு
அதனுள் ஒரு உடம்பு
நிரம்பாத பள்ளங்களுடன்
மணக்கத் தொடங்கியிருந்தது
மறுதலிக்கப்பட்ட ஆத்மா
அவனுள் ஒளிர்வதாகப்பட்டது
“பிரம்மை”
அவன் சாக்கடை

 

 

ஆலயம் திறந்தது
எனக்காக மட்டும்
யாசித்த அவனுக்கும்
யாசிக்காத நாய்க்கும்
பிச்சை மறுத்து உள்ளேகி
பிச்சை கேட்டு மீண்டு
நானும் அவனும்
ஒரே தெருவில் நின்றோம்

 

 

அவனது ஆறாவது
சுதந்திரப்பட்டது
நகைத்தது எனதை
அது சிறையிலிருந்தது

 

 

எனக்கும் சிரிப்பு வந்தது
என் இதழ் பிறழ்ந்து
இம்மியாகப் பிரிந்து
யாரும் கவனிக்கவில்லை
என்னிடம் காரணம் இல்லை

 

 

பார்த்துக் கொண்டிருந்தார்கள்
அவனை
அதிசயங்கள் அந்நியமாக்கப்படுகின்றன
ஆறாவதுகளின் காரணங்களினால்

 

 

அவன் பேசத் தொடங்கியிருந்தான்
காரணமில்லாமல்
நிறைய சிரித்தான்
காரியத்துடன்
என்னைப் பார்த்தும்
இல்லை
அது “பிரம்மை”
அவன் பைத்தியம்


இரு கவிதை…ஒரு காதல்…

Author: நதியானவள், February 4, 2010
February 4, 2010

1.
இரு நிழல்கள்
ஒன்று இவள்
சற்றிறங்கிய மேகம்
தூறிக் கொண்டிருந்தது
கூடவே மரமும்
கரைந்து ஒன்றாகி
ஒரு நிழல்
காதல்

 

 

 

2.
சேர நின்றது
மழை
புன்னகைத்தாய்
பூத் தொடுத்தாய்
மௌனமாக்கப்பட்ட இதழ்
மொழிகளற்ற பிரக்ஞை
எட்டக் கிடந்தது
காமம்
தொடக் கடந்தது
காதல்


பெயர்

Author: நதியானவள், February 4, 2010
February 4, 2010

என் பெயர் இப்படி
இருந்திருக்க வேண்டாம்

 

 

பெயர்
இயல்புகளின் கலவை
இருப்பின் அடையாளம்
உருவ அருவங்களின் திரட்டு
என்றோ அழியும் உடலின்
அழியாத முகவரி
உலகம் என்னைச் சுட்ட
நானே வெட்டிக் கொடுத்த விரல்
நானே மறந்த சுயம்

 

 

இது எப்படி?
எங்கிருந்து இயங்குகிறது?
உச்சரிப்புக்குத் திரும்புவது
மனமா? உடலா?
நச்சரிப்புக்க்ளின் தீர்ப்பில்
தவணை முறை முடிவானதா?
இயங்க மறுக்கும் இரண்டுக்கும்
ஏன் ஒரே தலைப்பு?

 

 

இப்போது திரும்பியது
ஏதாவதாக இருந்திருக்கலாம்
ஒன்றாக
நிமிர்ந்து பார்ப்பதில்லை
என்று தலையும்
நினைவில் வைப்பதில்லை
என்று மனதும்
என் உலகின் பிரசன்னம்
விளங்காமல் போனதற்கும்
இதற்கும் சம்பந்தம் இருக்கும்

 

 

என்னையே படித்திராதது
என்னைப் பிரதிபலிப்பது
அபத்தம்
உங்கள் நினைவுகளில்
என்னை மறந்திடுங்கள்
அது நானில்லை
என் பெயர்

 

 

பெயர்
ஒரு பொய்
உண்மையில்லாத உண்மை
நீயில்லாத நீ
உன்னைப் பற்றிய
இயல்புகளைத் தாண்டி
கற்பனைகள் செல்லாத தீவு
அது உதவாது

 

 

நான் ஒளி
உங்களைப் போல
நீங்கள் என்னில்
ஒளிர்வதைப் போல
நான் பெயர்களை
நினைவுபடுத்துவதில்லை
அது தேவையில்லை
நான் உன்னை அறிய

 

என் பெயர்
இப்படி இருந்திருக்க வேண்டாம்
இருக்கவும் வேண்டாம்
உனதும் அப்படியே


கொஞ்சமாய் எனக்குமாய்!

Author: நதியானவள், December 30, 2009
December 30, 2009

நிதர்சனங்களின் கற்பிதங்கள்
நீளமாக இருக்கின்றன
என்னால் ஒருமுறையேனும்
வாசிக்க முடியாதனவாக

 

அந்த எண்ணற்றவைகளுக்குள்
சிலவற்றைத்தான் விளக்கினாள் அம்மா
இன்னமும் விளக்கிக் கொண்டே

 

நடை குறித்த கவலைகளிலும்
உடை பற்றிய விவாதங்களிலும்
அவளை முத்தமிடல் என்பது
சாத்தியப்படுவதாக இல்லை
புன்னகைத்தல் கொஞ்சம்
சுலபமாக இருக்கிறது

 

நின்று நடக்க நினைப்பினும்
அவளின் கைத்தடியின் நீளம்
எட்டக் கூடியதாகவும்
முட்ட மட்டும் முடிவதாகவும்
அம்மா “பாரதி” படித்திருக்கவில்லை

 

களிமண் உட்செரித்த நீர்
பின்னொரு நாளில்
சிலையில் வடிந்ததை
நான் நம்பவில்லை
அப்படியே இதையும்
பாரதிக்காய்
கொஞ்சம் எனக்குமாய்


நான் இருந்தேன்

Author: நதியானவள், December 11, 2009
December 11, 2009

என் சோற்றுப் பருக்கைகளில்
உன் பெயர் எழுதப்பட்டு
அழிக்கப்பட்டிருக்கவேண்டும்
உண்ணும் போது
உன் நினைவு வந்தது

 

சாலை கடக்கையில் எனக்குக்
கை காட்டிய சிறுவன்
நீயாகத் தெரிந்தாய்
அப்போது சிரிக்கவும் செய்தாய்

 

இலக்கற்று அலைந்த மேகத்தில்
மழை கருக்கட்டியதை
நான் ரசித்தபோது
அந்த வெள்ளத்தில்
நீ மூழ்கிக் கொண்டிருந்தாய்

 

இசை மீட்டி யாசித்த
முதியவனின் வயலின்
உன் ஏந்திய கைபோல
வளைந்து தெரிந்தது
அதன் இசையில் உன் குரல்
இழைந்து இழைந்தது

 

மார்புறிஞ்சிக் கண்ணயர்ந்த
பிஞ்சொன்றைக் காண்கையிலே
நீ தாயிழந்து நின்று
ஓவென்று அலறியதும்

 

கந்தல் உடை கட்டி
காணமல் போன தந்தை தேடி
விந்தி விந்தி நீ
வீதிகளில் திரிந்ததுவும்

 

பெருந் தெருக்கள் தாங்கும்
நியோன் விளக்குகளில்
நின் விழியின் கண்ணீர்
தளும்பி வழிந்ததுவும்

 

என் அடி மனதில் ஊறி
ஊழித்தாண்டவம் ஆடி
உலுக்கிப் போட்ட போதும்
நீ என் நினைவில் இருந்தாய்

 

இன்னொரு கவிதை பற்றி
இந்தக் கவியூடு எண்ணி
எழுதி முடிக்க முன்
நீ மரித்திருந்தாய்
என் மகவே
அப்போதும் நான்
உன்னை நினைத்துக் கொண்டே இருந்தேன்
நினைக்க மட்டுந்தான் இருந்தேன்


தண்ணீர்ப் பாம்புகள்

Author: நதியானவள், December 10, 2009
December 10, 2009

ஆழ்கிணற்றுக்குள் யாரோ
அள்ளிக் கொட்டிய இருட்டைக்
கிள்ளிப் போடுவது பற்றியும்
துலாவின் வாளி விழ எழும்
பிலாக்கணத்தை நிறுத்துவது குறித்தும்
தண்ணீர்ப் பாம்புகளை விடத்
தவளைகள்தான் கவலைப்பட்டன

 

படிகளில் குறிக்கப்பட்ட தத்தம்
பரம்பரைப் பெயர்கள் கொண்டே அவை
நீதிமன்றக் கூடுகளில்
அழைக்கப் பட்டிருந்தன

 

கோப்புகளுக்கும் வாய்தாக்களுக்கும்
நீர்ப்பாம்புகள் தலையைக் காட்டின
அதில் பல பெண்களாக இருந்தன
சில வாற்பேத்தைகளும்

 

நிலாவின் நிழல் விழுந்த
அரைகுறை இரவொன்றில்
“பாம்புகள் படியேற”
விதிகள் செய்யப்பட்டதாக
தவளைகள் கத்தின
அடுத்த மழையில் செத்தன

 

பின்வந்த அமாவாசையில்
பிசைந்த இருட்டில் நின்று
பாம்புகள் தீர்ப்பைப் படித்தன
தங்களின் காதுகள்
செவிடாகிப் போனதனால்
காத்திருக்கத் தொடங்கின
வாற்பேத்தைகளுக்காக
இப்போதும்


தானே தொலையும் நான்

Author: நதியானவள், November 21, 2009
November 21, 2009

தான் அடிக்கடி தொலைவதாக
அலட்டிக் கொண்டேயிருந்தது
“நான்”

நாலு பேருக்குள்
கலையும்”நான்” யாரென்பது தான்
எனக்கு விளங்கவேயில்லை

 

 

என் ஆழமனங் கிழித்து
எழுந்து பறக்கும் அதற்கு
தீனி போடுகிறது கூட்டம்

 

 

நெரிசலுக்குள் நின்று
நெக்குருகவே அது பெரும்
பிரயத்தனப்படுகிறது

 

 

அதற்கு கூட்டம் வேண்டும்
சிரிக்க
அழ

 

 

தான் தூங்கும் போதும்
கூடவர நிழலுக்கு
உத்தரவிட்டிருந்தது

 

 

திரளும் கூட்டம் தன்னை
தானறியாமலேவிளுங்குவதாகப்
பின்னர் கூறியது

 

 

சனத்துக்குள் சனமாகிப்
பிணமாகிப் போனேன் என்று
இருந்துவிட்டு அழவும் செய்கிறது

 

 

தொலைத்ததும் தொலைக்கப்படுவதும்
தொலைப்பதும் தொலைக்க இருப்பதும்
தன்னாலே அது தன்னுள்ளே என்ற
பரம உண்மை அறியாது

 

 

மரங்கள் பிசாசுகளாகும்
நடுநிசியில் விழித்திருந்து
“நான்”அடிக்கடி தொலைவதாக
அலட்டிக் கொண்டேயிருக்கிறது
“நான்”